சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 28.04.20 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 28.04.20 

புறங்கூறுதல் எனும் தீய குணத்தைக் கைவிடுவோம்

திருத்தந்தை : பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்ட ஆசியா பீபி போன்று, இன்றைய உலகிலும் பலர் மறைசாட்சிகளாக துயர்களை அனுபவிக்கிறார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுநோயை ஒட்டிய கட்டுப்பாடுகள், இத்தாலி உட்பட சில நாடுகளில் தளர்த்தப்படுவதற்கு முயற்சிகள் இடம்பெற்றுவரும்வேளையில், மக்கள் முன்மதியுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்திலிருந்து காணொளி வழியாக மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, திருப்பலியின் துவக்கத்தில் இந்த விண்ணப்பத்தை விடுத்தார்.

வரும் திங்கள்கிழமை முதல் இத்தாலியில், கோவிட்-19 நோய் தொடர்புடைய பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், இந்த விண்ணப்பத்தை இச்செவ்வாய்கிழமை காலை திருப்பலியின் துவக்கத்தில் முன்வைத்த திருத்தந்தை, இக்கொள்ளை நோய் திரும்பி வராமல் தடுப்பதற்கு நம் நடவடிக்கைகள் வழியாக உதவ வேண்டியது அவசியம் என்றார்.

புனித ஸ்தேவான் (Stephen) அவர்களுக்கு எதிராக பொய்சாட்சியம் உரைக்கப்பட்டு அவர் நகருக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்பட்ட நிகழ்வை விவரிக்கும் விவிலியப்பகுதியைக் குறித்து (தி.பணிகள் 7:51-8:1). தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கு எதிராகப் பேசினார் என எவ்வாறு இயேசுவைக் குறித்து மக்களை நம்ப வைத்தார்களோ, அவ்வாறே, புனித ஸ்தேவான் குறித்தும் பொய்ச்சான்று கூறி மக்களை நம்ப வைத்தனர் மறைநூல் அறிஞர்கள் என்றார் திருத்தந்தை.

அன்று புனித ஸ்தேவான், பொய்க்குற்றச்சாட்டுக்கள் வழியாக தீர்ப்பிடப்பட்டதுபோல், இன்றைய உலகிலும் பலர் மறைசாட்சிகளாக துயர்களை அனுபவிக்கிறார்கள், என்று கூறியத் திருத்தந்தை,  பாகிஸ்தான் நாட்டில் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி என்ற கத்தோலிக்க பெண்மணியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறினார்.

இன்றைய உலகில் பல சமுதாயங்களில், ஏன், கிறிஸ்தவ நிறுவனங்களிலும், புறங்கூறுதல் எனும் கசையடிகள் வழியாக, மற்றவர்கள் குறித்த தப்பெண்ணங்களை நாம் உருவாக்கிவருகிறோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் நாவு குறித்து கவனமாக இருக்கவும், புறங்கூறுதல் என்ற தீயச்செயலிலிருந்து விலகி, நம் தீர்ப்புகளில் நியாயமாக இருக்கவும், இறைவனின் அருளை இறைஞ்சுவோம் என்ற அழைப்பை, தன் மறையுரையின் இறுதியில் முன்வைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 April 2020, 14:05
அனைத்தையும் படிக்கவும் >