தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்ல திருப்பலி - 020420 சாந்தா மார்த்தா இல்ல திருப்பலி - 020420 

தனிமையில் துன்பப்படுவோருக்காக செபிப்போம்

நம்மை என்றும் நினைவில் வைத்திருப்பது, இறைவனின் இலக்கணம், நாம்தான், அவரை மறந்து வாழ்கிறோம் – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 2, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலியை, இந்த உலகளாவிய நெருக்கடி நேரத்தில், தங்குவதற்கு இடமின்றி இருப்பவர்களுக்கும், யாருக்கும் தெரியாமல், தனிமையில் துன்பப்படுவோருக்கும் ஒப்புக்கொடுத்தார்.

புனித அன்னை தெரேசாவின் பரிந்துரை

நாளிதழ் ஒன்றில் தான் கண்ட ஒரு புகைப்படத்தில், ஒருவர் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் படுத்திருந்ததைக் கண்டு மனம் வேதனையுற்றது என்றும், இத்தகைய நிலையில் துன்புறும் பலருக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்யும் மனதைப் பெறுவதற்கு, புனித அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையுடன் செபிப்போம் என்றும், இத்திருப்பலியின் துவக்கத்தில் கூறினார், திருத்தந்தை.

இன்றையத் திருப்பலியின் இரு வாசகங்களிலும், ஆபிரகாம், மற்றும் இறைவன் நம்மோடு மேற்கொள்ளும் உடன்படிக்கை ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்பதை, தன் மறையுரையின் ஆரம்பத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

நம்மை என்றும் நினைவில் வைத்திருக்கும் இறைவன்

"ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்" (தி.பா. 105:8) என்பதை, இன்றைய பதிலுரைப்பாடலில் ஒரு பல்லவியாகக் கூறினோம் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம்மை என்றும் நினைவில் வைத்திருப்பது, இறைவனின் இலக்கணம், நாம்தான், அவரை மறந்து வாழ்கிறோம் என்று எடுத்துரைத்தார்.

ஆபிரகாமைத் தெரிவு செய்து, அவருடன் உடன்படிக்கையை மேற்கொண்டு, அவரை ஒரு பெரும் மக்களின் தந்தையாக மாற்றுவதாக இறைவன் வாக்களிக்கிறார் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெரிவு செய்தல், உடன்படிக்கை, மற்றும் வாக்குறுதிகள் ஆகிய மூன்றும் நம்பிக்கை வாழ்வின் பரிமாணங்கள் என்று கூறினார்.

கிறிஸ்தவர் என்பதன் அடையாளம்

நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்தவர் என்பதன் அடையாளம், நாம் பெறும் திருமுழுக்கோடு நின்றுவிடுவதில்லை, மாறாக, நம்மைத் தெரிவுசெய்த இறைவனுடன் நாம் கொள்ளும் உடன்படிக்கையாலும், இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கிறிஸ்தவ வாழ்வு அடங்கியுள்ளது என்று கூறினார் திருத்தந்தை.

இத்திருப்பலியில், திருவிருந்து பகிர்வு நடந்தபின், இத்திருவிருந்தில் ஆன்மீக அளவில் மக்கள் பங்கேற்பதற்கு உதவியாக, திருத்தந்தை ஒரு செபத்தைக் கூறினார். அதைத்தொடர்ந்து, திருநற்கருணை ஆராதனையும், திருநற்கருணை ஆசீரும் இடம்பெற்றன.

02 April 2020, 13:54
அனைத்தையும் படிக்கவும் >