தேடுதல்

Vatican News
நேரடி ஒளிபரப்பில் திருத்தந்தையின் சாந்தா மார்த்தா இல்லத் திருப்பலி நேரடி ஒளிபரப்பில் திருத்தந்தையின் சாந்தா மார்த்தா இல்லத் திருப்பலி 

ஊடகங்களில் பணியாற்றுவோருக்காக செபிப்போம் - திருத்தந்தை

தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை, ஊடகங்களின் வழியே ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோருக்காக செபிப்போம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 1, இப்புதனன்று காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், ஊடகங்களில் பணியாற்றுவோருக்காக செபிப்போம் என்ற கருத்தை குறிப்பிட்டார்.

தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை, ஊடகங்களின் வழியே ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோருக்காக, குறிப்பாக, வீடுகளில் அடைபட்டிருக்கும் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட முயல்வோருக்காக செபிப்போம் என்ற கருத்தை, இன்றைய திருப்பலியின் துவக்கத்தில் திருத்தந்தை கூறினார்.

விடுதலை வேண்டி எழுப்பப்படும் மன்றாட்டு

"ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக்  கொடுமைப்படுத்தயவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்!" (திருப்பாடல் 18) என்று இன்றைய நுழைவுப் பல்லவியில் கூறப்பட்டுள்ள சொற்களை, இத்திருப்பலியின் துவக்கத்தில் வாசித்த திருத்தந்தை, பிரான்சிஸ் அவர்கள், விடுதலை வேண்டி எழுப்பப்படும் மன்றாட்டு இது என்று எடுத்துரைத்தார்.

இயேசுவின் அடையாளத்தைக் குறித்து விவாதங்கள்

கடந்த சில நாள்களாக யோவான் நற்செய்தியின் 8ம் பிரிவிலிருந்து நாம் வாசகங்களைக் கேட்டு வருகிறோம் என்பதை தன் மறையுரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பிரிவில், இயேசுவின் அடையாளத்தைக் குறித்து எழும் விவாதங்கள், அவருக்கும், பரிசேயருக்கும் இடையே மிகக் கடினமான முறையில் நிகழ்கின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

உண்மையான சீடர்களின் அடையாளம்

என் வார்த்தைகளில் நிலைத்திருந்தால் என் சீடர்களாய் இருப்பீர்கள் என்று இயேசு கூறியுள்ள சொற்களை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, இறைவனிலும் அவரது சொற்களிலும் தங்கியிருப்பது ஒன்றே, உண்மையான சீடர்களின் அடையாளமாக இருக்கவேண்டுமேயொழிய, படித்து பட்டம் பெறுவது போன்ற வேறு அடையாளங்கள் உண்மைச் சீடரை வெளிப்படுத்தாது என்று கூறினார்.

இயேசுவின் சீடராக இருப்பது ஒன்றே, ஒருவரை உண்மையில் விடுதலை செய்யும் என்பதையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏனைய கருத்தியல்கள் உண்மைச் சீடரை அடையாளப்படுத்தாது என்று கூறினார்.

ஆன்மீகத் திருவிருந்தில் கலந்துகொள்ள...

முந்தைய நாள்களைப் போலவே, இப்புதனன்றும், திருப்பலியின் இறுதியில், ஆன்மீக அளவில், திருவிருந்தில் மக்கள் கலந்துகொள்வதற்கு உதவியாக, ஒரு செபத்தைக் கூறியபின், திருநற்கருணை ஆராதனையை, சில நிமிடங்கள் மௌனமாக மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், திருநற்கருணை ஆசீரையும் வழங்கினார்.

01 April 2020, 14:08
அனைத்தையும் படிக்கவும் >