சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி  

கோவிட்-19 காலத்தில், ஆசிரியர், மாணவர்களுக்காக செபம்

இறைமக்கள் வேதனையில் இருந்தால், ஆறுதல் அளியுங்கள், அவர்கள் பாதை தடுமாறியிருந்தால் வழியைக் காட்டுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேய்ப்பர்களிடம் கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக் கிருமி பரவலால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளவேளை, வலைத்தளம் மற்றும் ஏனைய டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும், இத்தகைய தேர்வு முறைகளில் பழக்கப்படாத மாணவர்களுக்காகச் செபிப்போம் என்று, இவ்வெள்ளி காலை திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 24, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, ஐந்து வாற்கோதுமை அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்த புதுமை பற்றிய இன்றைய நற்செய்தியை (யோவா.6:1-15) மையப்படுத்தி மறையுரையாற்றினார்.  

இயேசு சோதித்து கற்பிக்கிறார்

தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும், “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று, பிலிப்புவை சோதிப்பதற்காக மட்டுமே இயேசு கேட்ட இந்தக் கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இந்நிகழ்வில், இயேசு, தம் திருத்தூதர்கள் பற்றி கொண்டிருந்த எண்ணத்தை உணர முடிகின்றது என்று கூறினார்.  

தம் திருத்தூதர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, இயேசு அவர்களைத் தொடர்ந்து சோதித்து வந்தார் என்றும், தாம் ஆற்றப்பணித்ததிலிருந்து அவர்கள் திசை மாறுகையில், இயேசு அவர்களைத் தடுத்து நிறுத்தி கற்பித்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.

தம் திருத்தூதர்கள், இறைமக்களின் மேய்ப்பர்களாக வளருவதற்கு இயேசு ஆற்றிய இத்தகைய நிகழ்வுகள் நற்செய்தியில் நிறைய உள்ளன என்றும், இயேசு அதிகம் அன்புகூர்ந்த காரியங்களில் ஒன்றான, மக்கள் திரளோடு இருப்பதும், உலகளாவிய மீட்பின் அடையாளமாக இருக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.

திருத்தூதர்கள் மிகவும் விரும்பாத காரியங்களில் ஒன்று, மக்கள் பெருந்திரள், ஏனெனில், அவர்கள், ஆண்டவரோடு நெருங்கி இருந்து, அவர் கூறும் எல்லாவற்றையும் கேட்பதற்கு விரும்பினர் என்று கூறிய திருத்தந்தை, திருத்தூதர்களின் ஒவ்வொரு நாளைய ஓய்வு நேரம் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்கவும், தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் விரும்பினர் என்று கூறினார்.

இயேசு மக்களோடு இருக்க விரும்பியதற்கு, நற்செய்தியிலிருந்து எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைமக்களின் அருகில் இருக்கும் மேய்ப்பர்களின் பண்பை இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கற்பித்தார் என்று கூறினார்.,

இறைமக்கள் எப்போதும் வெளிப்படையான காரியங்களைத் தேடுவதால், அவர்கள் மேய்ப்பர்களைக் களைப்படையச் செய்கின்றனர், ஆதலால் மேய்ப்பர்கள்  எப்போதும் இத்தகைய காரியங்களை வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும், அப்பம் பலுகச் செய்த புதுமையை மற்ற நற்செய்தியாளர்கள் கூறும்போது, “மாலையானதால், சீடர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட விரும்பினர், ஆனால் இயேசு தம் சீடர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் (மத்.14,16)" என்று கூறியுள்ளார் என,. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

"அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று, இன்று, அனைத்து மேய்ப்பர்களுக்கும் இயேசு கூறுகிறார் என்றும், அவர்கள் வேதனையில் இருந்தால், ஆறுதல் அளியுங்கள், அவர்கள் பாதை மாறியிருந்தால் வழியைக் காட்டுங்கள் என்று கூறிய திருத்தந்தை, மேய்ப்பரின் அதிகாரம் பணியாற்றுவதில் உள்ளது என்றும் எடுத்துரைத்தார். 

மேய்ப்பர்கள், மற்ற அதிகாரங்களால் தவறிழைக்கும்போது, அவர்களின் அழைப்பு சிதைவுறுகிறது என்று மறையுரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்கள் குறித்து அஞ்சாமல் அவர்களுக்கு அருகில் இருப்பதற்கு ஆண்டவர் திருஅவையின் மேய்ப்பர்களிடம் பேசுவாராக என்று செபித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2020, 13:53
அனைத்தையும் படிக்கவும் >