திருப்பலியின் இறுதியில் நற்கருணை ஆசீர் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியின் இறுதியில் நற்கருணை ஆசீர் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

நம்மிடையே வாழும் யூதாசுகள் மனம் திரும்ப செபிப்போம்

இன்றும், நம்மிடையே, பல யூதாசுகள், தங்கள் சொந்த ஆதாயத்திற்கென நெருங்கிய உறவுகளைக் காட்டிக்கொடுக்கவும், அவர்களை விலைபேசவும் முன்வருகின்றனர் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இலாபம் திரட்ட நினைப்போரின் உள்ளங்களை, இறைவன் தொட்டு நல்வழிப்படுத்த இத்திருப்பலியில் செபிப்போம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 8, இப்புதனன்று, திருப்பலியின் துவக்கத்தில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தைக் கூறி திருத்தந்தை நிறைவேற்றிவரும் திருப்பலிகள், உரோம் நேரம் காலை 7 மணி முதல் நேரடி ஒளிபரப்பில் உலகினரைச் சென்றடைகிறது.

காட்டிக்கொடுக்கப்பட்ட புதன்

இப்புதனன்று நிறைவேற்றிய திருப்பலியில், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்தை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வாரத்தின் புதன் கிழமை, காட்டிக்கொடுக்கப்பட்ட புதன் என்று அழைக்கப்படுகிறது என்ற எண்ணத்தை, தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

இயேசுவைக் காட்டிக்கொடுக்கவும், அவரது உயிருக்கு விலைபேசவும் முன்வந்த யூதாசைப்போல இன்றும் நம்மிடையே பல யூதாசுகள் தங்கள் சொந்த ஆதாயத்திற்கென நெருங்கிய உறவுகளைக் காட்டிக்கொடுக்கவும், அவர்களை விலைபேசவும் முன்வருகின்றனர் என்பதை, திருத்தந்தை, தன் மறையுரையில், வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

"தன் தாயையே விற்கக்கூடியவர்"

முன்னொரு காலத்தில், ஆப்ரிக்காவிலிருந்து, மனிதர்கள், அமெரிக்க கண்டத்தின் பல நாடுகளில் அடிமைகளாக விற்கப்பட்டதுபோல, இன்று, பல்வேறு அடிப்படைவாத வன்முறைக் குழுக்கள், பெண்களை வர்த்தகம் செய்து வருகின்றனர் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய குற்றங்களை செய்வோருக்கு, "தன் தாயையே விற்கக்கூடியவர்" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுவதை குறிப்பிட்டார்.

மனித வர்த்தகத்தின் அடிப்படையாக இருப்பது, கடவுளா, காசா என்ற இருமுனைக் கேள்வி என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த சோதனையைக் குறித்து இயேசு பேசியபோது, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" என்பதை திட்டவட்டமாகக் கூறியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நமக்குள் சிறு, சிறு யூதாசுகள்

தன் ஆதாயத்தில் மட்டும் கவனம் செலுத்திய யூதாசின் குணத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களைக் குறித்து பேசும்போது, நம் ஒவ்வொருவருக்குள்ளிருக்கும் சிறு, சிறு யூதாசுகளைக் குறித்தும் சிந்திக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலர், தங்கள் சொந்த சுகத்தில் மட்டும் கவனம் செலுத்தி, பெற்றோரை முதியவர் இல்லத்தில் சேர்ப்பதும், ஒருவகையில் யூதாசின் குணமே என்று குறிப்பிட்டார்.

இறுதிவரை தன் நண்பனாக...

தன்னைக் காட்டிக்கொடுக்க முயன்ற யூதாசையும், இயேசு, இறுதிவரை, தன் நண்பன் என்றே கருதினார் என்பதை, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, யூதாசு இயேசுவை விட்டு விலகிச் சென்றதால், அவர், சாத்தானின் பிடியில் சிக்கி, தன் வாழ்வை முடித்துக்கொண்டார் என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் நினைவுறுத்தினார்.

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கும் சிறு, சிறு யூதாசுகள் எங்கே என்ற கேள்வியை எழுப்பி, விடை தேடுவது பயனளிக்கும் என்ற கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஏனைய நாள்களைப் போலவே, இப்புதனன்று நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், ஆன்மீக அளவில், திருவிருந்தில் மக்கள் கலந்துகொள்வதற்கு உதவியாக, ஒரு செபத்தைக் கூறியபின், திருநற்கருணை ஆராதனையை, சில நிமிடங்கள் மௌனமாக மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், திருநற்கருணை ஆசீரையும் வழங்கினார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய காலைத் திருப்பலியின் கருத்து, மறையுரையின் கருத்து மற்றும் புதன் மறைக்கல்வி உரையில் வழங்கிய ஒரு கருத்து ஆகியவற்றை, மூன்று டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2020, 14:05
அனைத்தையும் படிக்கவும் >