சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியின்போது - 270320 சாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியின்போது - 270320  (Vatican Media)

இன்னலிலுள்ள மக்களுக்காகச் செபிப்பவர்களுக்கு நன்றி

நோயாளிகள், வயது முதிர்ந்தோர், மற்றும், வாழ்வில் அத்தியாவசியத் தேவைகள் ஏதுமின்றி துன்புறும் குடும்பங்கள் மீது அக்கறையாய் இருக்கும் அனைவருக்கும் நன்றி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நோயாளிகள், வயது முதிர்ந்தோர், மற்றும், வாழ்வில் அத்தியாவசியத் தேவைகள் ஏதுமின்றி துன்புறும் குடும்பங்கள் மீது அக்கறையாய் இருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, மார்ச் 27, இவ்வெள்ளி காலை திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மார்ச் 27, இவ்வெள்ளி உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, அதாவது இந்திய நேரம் முற்பகல் 11.30 மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, குடும்பத்தை நடத்திச் செல்ல போதுமான பொருள்கள் இல்லாதவர்கள், தனிமையில் வாடும் வயது முதிர்ந்தோர், மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகள் போன்றோர் மீது மிகுந்த அக்கறை காட்டும் எல்லாருக்காகவும் நன்றி சொல்கிறேன் என்று திருப்பலியைத் தொடங்கினார்.

இவர்கள் மற்றவர்களுக்காகச் செபிக்கின்றனர், அச்செபம் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும், இது ஒரு நல்ல அடையாளம், விசுவாசிகளின் இதயங்களில் இத்தகைய உணர்வுகளைத் தூண்டும் ஆண்டவருக்கு நன்றி சொல்வோம் என்றும், இத்திருப்பலியின் துவக்கத்தில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவுக்கு எதிரான தீயவர்களின் சினம்

இயேசுவுக்கு நிகழப்போவது பற்றி, ஏறத்தாழ ஒரு செய்தி அறிக்கை போல அமைந்துள்ள, சாலமோன் ஞானம் நூலிலிருந்து வாசிக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகத்தின் (சா.ஞா.2:1a,12-22) கருத்தை, மறையுரையில் விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிற்காலத்தில் நிகழப்போவது பற்றி முன்னறிவிக்கும், ஏறத்தாழ ஒரு வரலாற்று குறிப்பாக இந்த முதல் வாசகம் உள்ளது என்றும், இயேசு, கொடியவர்களின் தீய வாழ்வுப் பாதையை அவர்களுக்கு உணர்த்தியதால், அவர்கள், அவருக்குத் தொடர்ந்து துன்பம் கொடுத்து வந்தனர் என்றும் கூறியத் திருத்தந்தை, அதனால் அவர்கள், இயேசுவை, வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் பரிசோதிக்கத் திட்டம் தீட்டினர், இறுதியில் அவரை வெட்கத்துக்குரிய மரணத்திற்குத் தீர்ப்பிட்டனர் என்று கூறினார்.  

பேய்த்தனமான காழ்ப்புணர்வு

இந்தக் கொடியவர்கள் இயேசுவை வெறுத்தது சாதாரணமானது அல்ல, அது, சாத்தானால் தூண்டப்பட்ட இரக்கமற்ற கோபவெறி போன்றது என்றும், சாத்தான் யோபுவிடமும் இவ்வாறே முயற்சித்தது, அவரைக் கடவுளிடமிருந்து பிரிப்பதற்கும், கடவுளின் வேலையை அழிக்கவும் முயற்சி செய்தது என்றும், திருத்தந்தை கூறினார்.

மற்றவரை அழிப்பதற்கு எடுக்கும் கோபவெறியுடன்கூடிய உறுதிப்பாடு, சாத்தானிடமிருந்து வருவதாகும் என்றும், இதை, சாத்தான் இயேசுவை எவ்வாறு சோதித்ததில் என்பதில் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதிலும் காண முடிகின்றது என்றும், கிறிஸ்தவர்களைக் கடவுளிடமிருந்து பிரிப்பதற்கு சாத்தான் மிகவும் உலகப்போக்கான வழிகளைக் கையாள்கிறது என்றும், இதுவே பேய்த்தனமான காழ்ப்புணர்வு என்றும், திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

கடுஞ்சின உணர்வின் முன் அமைதி

இத்தகைய மூர்க்கத்தனமான கோபவெறிச் சூழலுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?  என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடலை மேற்கொள்வது அல்லது அமைதியாக இருந்து விடுவது, இந்த இரண்டு வழிகளே சரியானவை என்று கூறினார்.

இச்சூழல்களில் இயேசு இவற்றையே செய்தார் என நற்செய்திகளில் காண்கிறோம், இயேசு வெளிப்படையாய் பேசியதையும், வார்த்தைகள் எந்த நன்மையையும் கொணராது என்ற நிலையில் அவர் மௌனம் காத்தார் என்பதையுமே நாம் பார்க்கிறோம், வெஞ்சினத்தின்முன் இயேசு மௌனம் காத்தார், மௌனத்தில், அவர் தன் பாடுகளை எதிர்கொண்டார் என்றார், திருத்தந்தை,

மௌனம் காக்க துணிவு

புறங்கூறுதல், மற்றவர் பற்றி பின்னால் பேசுதல் போன்ற சமுதாய நச்சரிப்புக்களை நாம் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறோம், இவை சித்ரவதைகள் போன்று வலிமையானவை அல்ல, ஆயினும், இதுவும் ஒருவிதமான கடுஞ்சினம், ஏனெனில் இது மற்றவரை அழிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இத்தகைய சிறிய கடுஞ்சின செயல்களின் முன் மௌனம் காப்பதே சிறந்தது என்று திருத்தந்தை கூறினார்.

தீய ஆவிக்கு எதிராகப் போராடுவதற்கு ஆண்டவரிடம் மன்றாடுவோம், உரையாடல் தேவைப்படும்போது உரையாடுவோம், ஆனால், கடுங்கோபத்தின்முன், மற்றவரைப் பேச அனுமதிக்கவும், நாம் மௌனமாக இருக்கவும் தேவையான துணிவை ஆண்டவரிடம் கேட்போம் என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2020, 15:07
அனைத்தையும் படிக்கவும் >