சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 140320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 140320 

கோவிட்-19 இன்னலான சூழலில், குடும்பங்களுக்காகச் செபிப்போம்

வீட்டில் வாழ்ந்துகொண்டு, வீடு என்பதை உணராமல் வாழ்கையில், உடன்பணியாளர்களோடு மட்டும் உறவு இருக்கும், தந்தையோடு, உடன்பிறப்போடு உறவு இருக்காது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 14, இச்சனிக்கிழமை காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், குடும்பங்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குடும்பங்கள், இந்த நெருக்கடியான சூழலில், அமைதி, மகிழ்வு, மற்றும், மனவுறுதியால் பாதுகாப்பை உணருமாறு கடவுளிடம் மன்றாடுவோம் என்று, திருப்பலியின் துவக்கத்திலேயே கூறியத் திருத்தந்தை, மாற்றுத்திறனாளிகளுக்கு பகலில் பராமரிப்பு வழங்கும் மையங்கள் மூடப்பட்டுள்ளதால், அவர்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களை, இத்திருப்பலியில் சிறப்பாக நினைக்கின்றேன் என்று கூறினார்.

பாதுகாப்பிற்காக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், பிள்ளைகளோடு வீடுகளில் தங்கி இருக்கும் குடும்பங்கள், இந்த நெருக்கடியான சூழலை, அமைதி மற்றும், மகிழ்வில் நன்றாகக் கையாளச் சிறப்பாகச் செபியுங்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

காணாமற்போன மகன் உவமை

மேலும், மறையுரையில், காணாமற்போன மகன் உவமை பற்றிய நற்செய்தி பகுதி குறித்து பேசுகையில், வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்த சூழலில், இயேசு இந்த உவமையைச் சொல்கிறார் என்பதை திருத்தந்தை கோடிட்டுக்காட்டினார்.

பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தவேளை, இயேசு இந்த உவமை வழியாக அவர்களுக்குப் பதில் கூறினார் என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, வரிதண்டுவோரும், பாவிகளும் இயேசு சொல்வதை மட்டுமே கேட்க விரும்பினர், ஆனால், பரிசேயரும், மறைநூல் அறிஞரும், முணுமுணுத்து குறை கூறினர், இயேசு மக்கள் மீது கொண்டிருந்த அதிகாரத்தை அழிக்க முயற்சித்தனர் என்று கூறினார்.

மீட்பின் தேவை உணர்ந்த மக்கள், இயேசுவில் ஒரு மேய்ப்பரைக் கண்டனர், தங்கள் வாழ்வை அமைப்பதற்கு அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது என்றுரைத்த திருத்தந்தை, பல்கலைக்கழகம் சென்று, ஒன்று, இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள், தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என உணர்கின்றனர், தங்களின் தன்னிறைவை நம்புகின்றனர், அவர்கள், மக்களை, பாவிகளை இழிவாகக் கருதுகின்றனர், பாவிகளை அவமதிக்கின்றனர் என்று கூறினார்.

மூத்த மகன்

இந்த காணாமற்போன மகன் உவமையில், வீட்டில் இருந்த மூத்த மகனோடு பிரச்சனை தொடங்குகிறது, இந்த மகன் வீட்டில் இருந்தான், ஆனால் வீட்டில் வாழ்வதென்றால் என்ன பொருள் என்பதை ஒருபோதும் உணராதிருந்தான், அவன் தன் கடமைகளை ஆற்றினான், ஆனால், அவனது தந்தையின் அன்புறவைப் புரியாதிருந்தான் என்று திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

மூத்த மகன் கடுங்கோபமுற்று வீட்டிற்குள் நுழைய விரும்பவில்லை, சட்ட அறிஞர்கள் செய்வதும் இதுதான் என்று விளக்கிய திருத்தந்தை, பாவத்திலிருந்து திரும்பி வந்த மகனிடம் தந்தை ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை, மாறாக, அந்த மகனை அவர் முத்தமிட்டார், தழுவிக்கொண்டார், அவனைக் கொண்டாடினார், அதேநேரம், மூத்த மகனுக்கு தந்தை விளக்கவேண்டிய தேவை ஏற்பட்டது என்று எடுத்துரைத்தார்.

ஆண்டவரின் இந்த உவமை, பல காரியங்கள் பற்றிச் சொல்கிறது, அவர் பாவிகளோடு செல்கிறார் என விமர்சித்தவர்களுக்கு அவர் கூறிய பதில் பற்றிச் சொல்கிறது, இன்றும் திருஅவை மக்களில் பலர், தேவையில் இருப்போரை அணுகுவோர், தாழ்மையான மக்கள், பணியாற்றுவோர், ஏன் நமக்காக உழைப்பவர்களைக்கூட குறை கூறுகின்றனர், எனவே பிரச்சனை என்னவென்பதைப் புரிந்துகொள்ள, இத்திருப்பலியில் ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வீட்டில் வாழ்ந்துகொண்டு, வீடு என்பதை உணராமல் வாழ்கையில், உடன்பணியாளர்களோடு மட்டும் உறவு இருக்கும், தந்தையோடு, உடன்பிறப்போடு உறவு இருக்காது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2020, 15:31
அனைத்தையும் படிக்கவும் >