சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 190320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 190320 

சிறைக் கைதிகளுக்காக, திருத்தந்தையின் சிறப்பான வேண்டுதல்

நிச்சயமற்ற, துன்பகரமான இவ்வேளையில், தங்கள் குடும்பத்தினருக்கு எதுவும் செய்ய இயலாத நிலையை உணர்ந்து வருந்தும் சிறைக் கைதிகளுடன் நம்மையே இணைத்து, அவர்களுக்காக செபிப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 19, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனித யோசேப்பு திருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், சிறையில் இருப்போரை சிறப்பாக நினைவுகூர்ந்து செபித்தார்.

சிறைக் கைதிகளுடன் நம்மையே இணைத்து...

சிறையில் அடைபட்டிருக்கும் இவர்கள் பெரும் துன்பங்களை அடைகின்றனர், மற்றும், இந்த தொற்றுநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால், தங்கள் குடும்பங்களில் இருப்போரைக் குறித்து கவலைகொள்கின்றனர் என்றும், நிச்சயமற்ற, அதேவேளை, துன்பகரமான இவ்வேளையில், தங்கள் குடும்பத்தினருக்கு எதுவும் செய்ய இயலாத நிலையை உணர்ந்து வருந்தும் சிறைக் கைதிகளுடன் நம்மையே இணைத்து, அவர்களுக்காக செபிப்போம் என்றும், திருத்தந்தை, இத்திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

யோசேப்பு பெருவிழாவையொட்டி, இப்புனிதரைக் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோசேப்பு, நம்பிக்கை கொண்டவராகவும், அந்த நம்பிக்கையை வாழ்ந்து காட்டியவராகவும் இருந்ததால், அவரை நாம் நீதிமான் என்றழைக்கிறோம் என்று, தன் மறையுரையின் துவக்கத்தில் கூறினார்.

இறைவனுக்கே கல்விபுகட்டிய யோசேப்பு

இறைவனுக்கே கல்விபுகட்டியவர் யோசேப்பு என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, உண்மையில் மனிதராகப் பிறந்த இறைமகனுக்கு, இறைவன் மட்டுமே கல்வி புகட்ட முடியும், ஆனால், அது நேரடியாக நடைபெற இயலாத நிலையில், இறைவன், தன் அன்பு மைந்தனுக்கு கல்வி புகட்ட தேர்ந்தெடுத்த தகுதியான மனிதர் புனித யோசேப்பு என்று கூறினார்.

மறையுண்மையில் பங்கேற்ற யோசேப்பு

தச்சு வேலை செய்துவந்த யோசேப்பு, தன் பணியில், ஒரு மில்லி மீட்டர் அளவும் பிசகாமல், மிகத் துல்லியமாகப் பணியாற்றியதைப் போல, அவர், இறைவனின் மறையுண்மையிலும் எவ்வித கவனக்குறைவும் இல்லாமல், முழுமையாகப் பங்கேற்றார் என்று தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.

புனித யோசேப்பு, திருஅவையின் பாதுகாவலர் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர், இறைவனின் மறையுண்மையில் முழுமையாக நுழைந்ததைப்போல, திருத்தந்தை உட்பட, திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த மறையுண்மையில் நுழைவதற்குரிய பணிவை கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பினார்.

மறையுண்மையில் நுழையும்போது...

புரிந்துகொள்ள இயலாத மறையுண்மைகளுக்குள் பணிவுடன் நுழைவதற்குப் பதில், அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் சட்ட திட்டங்களை நாம் வகுத்துக்கொள்கிறோமா என்ற கேள்வியையும் உடன் எழுப்பியத் திருத்தந்தை, மறையுண்மையில் நுழையும்போது, அங்கு ஆராதனை நிகழ்கிறது, அதற்கு மாறாக, அதில் நுழைய இயலாதபோது, சட்டதிட்டங்களை வகுக்கும், ஓர் அமைப்பாக திருஅவை உருவாகிறது என்று எடுத்துரைத்தார்.

மறையுண்மையில் நுழையவும், அதன் வழியாக இறைவனை வணங்கி வழிபடவும் தேவைப்படும் வரத்திற்காக இறைவனிடம் செபிப்போம் எனக் கூறி, தன் மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2020, 14:56
அனைத்தையும் படிக்கவும் >