தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 

தொற்றுக்கிருமியால் உயிரிழந்தோருக்காக திருப்பலி

மற்றவர்களோடு நெருங்கிவருவதற்கு, உடல் சார்ந்த நெருக்கம் மட்டும் வழி அல்ல என்பதை இந்த தொற்றுக்கிருமியின் நெருக்கடியானச் சூழல் நமக்கு உணர்த்தியுள்ளது. - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் உயிரிழந்தோருக்காக தான் திருப்பலியை நிறைவேற்றுவதாக, மார்ச் 18, இப்புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில் தெரிவித்தார்.

நலப்பணியில் உயிர்துறந்தோருக்காக...

இந்த தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் உயிரிழந்தோர், குறிப்பாக, இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றி, அதன் விளைவாக, தங்கள் உயிரைத் துறந்த நலப்பணியாளர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்காக செபிப்போம் என்று, திருத்தந்தை, இத்திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

திருச்சட்டங்களை மையப்படுத்தி...

இத்திருப்பலியில் வழங்கிய மறையுரையில், இன்றைய இரு வாசகங்களும் திருச்சட்டங்களை மையப்படுத்தியவை என்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருச்சட்டங்களை, அவற்றின் முழுமையான நிறைவுக்கு எடுத்துச்செல்ல இயேசு விழைந்தார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

எட்டாத உயரத்தில் இருந்து, கட்டளைகளைப் பிறப்பிக்கும் சர்வாதிகாரியாக இருப்பதைக் காட்டிலும், மக்களுக்கு நெருங்கிவந்து அவர்களோடு பயணிக்கும் இறைவனாக தன்னை வெளிப்படுத்தவே, அவர் திருச்சட்டங்களை வழங்கினார் என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

மனிதர்களை நெருங்கிவரும் கடவுள்

கடவுள் மனிதர்களை நெருங்கிவரும் வேளைகளில், மனிதர்கள் அவரைவிட்டு விலகிச் செல்ல முயன்றதை, விவிலியத்தின் முதல் பக்கத்திலிருந்து நாம் காண முடியும் என்பதை தன் மறையுரையில் தெளிவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளைவிட்டு விலகிச் செல்வதற்கு, முதல் பெற்றோரைப்போல், அவரிடமிருந்து நம்மையே மறைத்துக்கொள்வதும், காயினைப்போல், நம் உடன்பிறந்தோரைக் கொல்வதும் அடையாளங்களாக உள்ளன என்று எடுத்துரைத்தார்.

விலகிச்செல்லும் மனிதர்கள்

அன்பினால் நம்மை நெருங்கிவரும் கடவுளிடமிருந்து நம்மையே மறைத்துக்கொள்வதற்கு உதவியாக, அவரை ஒரு நீதிபதியாக உருவகிக்கும் இறையியலை சிந்திக்கிறோம் என்று கூறிய திருத்தந்தை, இறைவனோ, நம்முடன் முழுமையாக நெருங்கிவருவதற்கு, நம்மைப்போல் ஒருவராக வந்தார் என்று கூறினார்.

மற்றவர்களோடு நெருங்கிவருவதற்கு, உடல் சார்ந்த நெருக்கம் மட்டும் வழி அல்ல என்பதை இந்த தொற்றுக்கிருமியின் நெருக்கடியானச் சூழல் நமக்கு உணர்த்தியுள்ளது என்பதை சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நெருக்கடி நேரத்தில், பிறரோடு, குறிப்பாக, தேவைகள் அதிகம் உள்ளவரோடு நாம் செபத்தின் வழியாகவும், உதவிகள் வழியாகவும் நெருங்கியிருப்போம் என்று தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2020, 15:13
அனைத்தையும் படிக்கவும் >