தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி, திருநற்கருணை ஆசீர் 200320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி, திருநற்கருணை ஆசீர் 200320 

நம் இறைத்தந்தையிடம் திரும்பிச் செல்வோம்

கொரோனா தொற்றுக்கிருமியால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள, பெர்கமோ பகுதியில் நலப்பணியாற்றும் அனைவருக்காகவும் செபிப்போம், நம் வானகத் தந்தையிடம் திரும்பி வருவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் மிக அதிகமாக தாக்கப்பட்டுள்ள, இத்தாலியின் பெர்கமோ பகுதியில் நலப்பணியாற்றும் அனைவரையும் இத்திருப்பலியில் சிறப்பாக நினைத்துச் செபிப்போம் என்று, மார்ச் 20, இவ்வெள்ளி காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில் தெரிவித்தார்.

பெர்கமோ பகுதியில் பணியாற்றும் மருத்துவர்கள், நோயாளிகளுக்கும், மற்றவரின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கும் தங்களின் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர், எனவே அவர்களுக்காகச் செபியுங்கள் என்று, அப்பகுதியிலிருந்து ஓர் அருள்பணியாளர், தனக்கு செய்தி அனுப்பியுள்ளார் என்று, திருப்பலியின் துவக்கத்தில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த நெருக்கடி காலக்கட்டத்தை நிர்வகிக்கும் அரசுத் தலைவர்கள், அடிக்கடி புரிந்துகொள்ளப்படாமையை எதிர்கொள்கின்றனர், ஆனால் நாம் இந்தச் சூழலிலிருந்து வெளிவருவதற்கு நமக்கு உதவும் தூண்களாகவும், இந்த நெருக்கடியிலிருந்து நம்மைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கும் அவர்களுக்காகவும் செபிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

மறையுரை

மேலும், இத்திருப்பலியில், இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தை அடிப்படையாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா" (14:2) என்ற சொற்கள், 75 ஆண்டுகளுக்குமுன், Carlo Buti என்பவர் பாடிய பாடலை எப்போதும் நினைவுபடுத்துகின்றது என்று கூறினார்.

குழந்தைப்பருவ பாடல்

‘உனது தந்தையிடம் திரும்பி வா, அவர் உனக்கு ஒரு தாலாட்டுப் பாடுவார்’ என்ற பாடலை (பாடல்-Torna Piccina Mia), புவனோஸ் அய்ரஸ் நகரில் வாழ்ந்த இத்தாலிய குடும்பங்கள் கேட்பதுண்டு மற்றும், அப்பாடலை அக்குடும்பங்கள் மிகவும் விரும்பின என்று கூறியத் திருத்தந்தை, அப்பாடல், நம் இறைத்தந்தை, தன்னிடம் திரும்பி வா என்று நம்மிடம் சொல்வதாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.

கடவுள் உங்கள் தந்தை, அவர் நீதிபதி அல்ல, அவரின் வீட்டிற்குத் திரும்பிப் போங்கள் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, எல்லாப் பணத்தையும் எடுத்துக்கொண்டு தொலைதூரம் சென்று அவற்றை வீணாக்கிய மகனுக்காகக் காத்திருக்கும் தந்தை பற்றிக் கூறும், காணாமல்போன மகன் பற்றிய உவமை பற்றியும் குறிப்பிட்டார்.

இறைத்தந்தையின் கனிவு

காணாமல்போன மகனுக்காகக் காத்திருந்த தந்தை காட்டிய கனிவு போன்று, கடவுளும் தம் கனிவை, குறிப்பாக இத்தவக்காலத்தில் காட்டுகிறார் என்றும், நம்மையே நாம் பரிசோதித்துப் பார்த்து இறைத்தந்தையை நினைத்து, நம் அப்பாவிடம் திரும்பிச் செல்வதற்கு இத்தவக்காலம் ஏற்ற காலம் என்றும் திருத்தந்தை கூறினார்.  

பல தவறான செயல்களைச் செய்திருப்பதால், தந்தையே உம்மிடம் திரும்பிவர வெட்கப்படுகிறேன் என்று நாம் சொல்கையில், அவரோ, திரும்பி வா, உனது குறைகளை குணப்படுத்துகிறேன் என்று சொல்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, நான் அவர்கள் மேல் உளமார அன்புகூர்வேன், அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது (ஓசேயா 14:4) என்று ஆண்டவர் கூறுகிறார் என்றார்.

நம் வாழ்வின் பல காயங்களை இறைத்தந்தைக் குணப்படுத்துகிறார், கடவுளிடம் திரும்பிச்செல்லுதல் என்பது, அவரின் அரவணைப்பிற்குச் செல்வதாகும் என்று கூறியத் திருத்தந்தை, அருள்பணியாளர்கள் இல்லாத சமயத்தில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறும் முறை பற்றியும் விளக்கினார்.

திரும்பி வா என்ற சொற்கள், நம் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் என்று, தான் நம்புவதாகவும், கடவுள், திரும்பிவரும் தன் மகனுக்காக விழாக் கொண்டாடத் தயாராய் இருக்கிறார் என்றும் தெரிவித்து மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை வழிபாட்டை சில நிமிடங்கள் நிறைவேற்றி, திருநற்கருணை ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.

20 March 2020, 15:14
அனைத்தையும் படிக்கவும் >