Vatican News
 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 240320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 240320 

மருத்துவர்களின் வீரத்துவமான எடுத்துக்காட்டுக்கு நன்றி

பெத்சதா குளத்தருகில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரை, இயேசு குணமாக்கிய நிகழ்வை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, அக்கறையின்மை என்ற பாவம் குறித்து எச்சரிக்கையாய் இருக்குமாறு வலியுறுத்தினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக் கிருமி நோயாளிகளுக்கு, தங்கள் வாழ்வை பணயம் வைத்து உதவும் மருத்துவர்கள் மற்றும் அருள்பணியாளர்களை, இச்செவ்வாய் காலை திருப்பலியில் சிறப்பாக நினைத்து செபித்தார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 24, இச்செவ்வாய் உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், கோவிட்-19 தொற்றுக் கிருமி நோயாளிகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அருள்பணியாளர்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன், அவர்கள், வீரத்துவ வாழ்விற்கு எடுத்துக்காட்டுக்களாக உள்ளனர், அந்நோயால் தாக்கப்பட்டு, உயிரிழந்த மருத்துவர்கள், மற்றும் அருள்பணியாளர்களைச் சிறப்பாக நினைத்துச் செபிக்கின்றேன் என்று சொல்லி, திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாய் காலை நிலவரப்படி, ஏறத்தாழ ஐந்தாயிரம் நலப்பணியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதே கொள்ளை நோயால், ஏறத்தாழ ஐம்பது அருள்பணியாளர்கள் இறந்துள்ளனர், செவிலியர் இந்நோய்க் கிருமியால் தாக்கப்பட்டுள்ளது பற்றித் தெரியவில்லை, ஆனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், திருத்தந்தை திருப்பலியின் துவக்கத்தில் கூறினார்.

தண்ணீர் குணப்படுத்துகிறது

இன்றைய திருப்பலி வாசகங்கள் (எசே.47:1-9,12;யோவா.5,1-16) தண்ணீரை, மீட்பின் அடையாளம் மற்றும், அதைப் பெறும் வழியாக வழங்குகின்றது என்று மறையுரையைத் துவக்கிய திருத்தந்தை, இந்த தண்ணீர், வாழ்வைக் கொண்ர்கிறது, கடலின் தண்ணீரைக் குணப்படுத்தி, அதை புதிய தண்ணீராக ஆக்குகிறது என்று கூறினார்.

உடல்நலம் பெறுவதற்காக, தனக்கு உதவி எதுவும் செய்யாமல், பெத்சதா குளத்தின் கரையில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய்க் காத்திருந்த முடக்குவாதமுற்ற மனிதரிடம் இயேசு குணமாக விரும்புகிறாயா என்று கேட்டபோது, அவர் ஆம் எனச் சொல்லாமல் புகார் சொன்னது, நம்மை வியப்படைய வைக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, அந்த மனிதர் தான் இயேசுவால் குணமடைந்தது குறித்து மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கவில்லை அல்லது அதை உலகிற்கு அறிவிக்கவில்லை, மேலும், இயேசு மீண்டும் அவரை ஆலயத்தில் சந்தித்தபோது நன்றிகூடச் சொல்லவில்லை, மாறாக, தான் குணமானது பற்றி அறிவிக்க, அவர் அதிகாரிகளிடம் செல்கிறார் என்று கூறினார்.

முடக்குவாதமுற்றவரின் அக்கறையின்மை

இந்த மனிதரின் இதயமும், ஆன்மாவும் நோயாக இருந்தன, மனச்சோர்வு தோல்விமனப்பான்மை, அக்கறையின்மை போன்ற நோய்களால் அவர் துன்புற்றார், குணமாக விரும்புகிறாயா என்று இயேசு அவரிடம் கேட்டபோது, நான் குணமாக விரும்புகிறேன் என்று பதில் சொல்லாமல், குளத்தில் மற்றவர்கள் முதலில் இறங்கி விடுகிறார்கள் என்று புகார் சொன்னார், 38 ஆண்டுகளாக தான் குணமாவதற்கு எதுவும் செய்யாமல் இவ்வாறு மற்றவர் பற்றி புகார் சொல்லிக்கொண்டே இருந்தார் என்று திருத்தந்தை கூறினார்.

இது, வாழ்தலின் மற்றும், மற்றவரைப் பர்றி புகார் சொல்லும் பாவம் என்று விளக்கிய திருத்தந்தை, இந்நிலை, தன் வாழ்விற்கு எந்த தீர்மானமும் எடுக்காமல் இருப்பதை தடை செய்கின்றது என்றும், நான் இந்த வாழ்வின் பலிகடா என நொந்துகொள்வதற்கும் வழியமைக்கிறது என்று கூறினார்.   

கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலர், இத்தகைய அக்கறையற்ற நிலையிலேயே வாழ்கிறோம் என்றும், இத்தகையவர்கள், நிறையச் செய்ய திறனற்றவர்களாய், எல்லாவற்றையும் குறித்து புகார் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர், அக்கறையின்மை ஒரு நஞ்சு, அது, வாழவிடாமல் ஆன்மாவைச் சூழ்ந்திருக்கும் பனிமூட்டம், அது ஒரு போதைப்பொருள், அதை அடிக்கடி சுவைத்தால் அதன்மீது விருப்பம் வரும், இறுதியில் அதிலே மூழ்கியிருக்கவேண்டிய சோகநிலைக்கு இட்டுச்செல்லும் என்றும் திருத்தந்தை எச்சரித்தார்.   

திருமுழுக்குத் தண்ணீர் நம்மைப் புதியவர்களாக ஆக்குகின்றது என்றுரைத்த திருத்தந்தை, யோவான் நற்செய்தி பிரிவு ஐந்தை மீண்டும் வாசிக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். 

24 March 2020, 15:48
அனைத்தையும் படிக்கவும் >