தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 290320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 290320  

திருத்தந்தை: அழுதுகொண்டிருக்கும் மக்களை நினைக்கின்றேன்

தவக்கால ஐந்தாம் ஞாயிறு, கண்ணீர் சிந்தும் ஞாயிறாக அமையட்டும் என்று, இஞ்ஞாயிறு காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்நாள்களில் அழுதுகொண்டிருக்கும் பலரை நினைக்கின்றேன் என்றுரைத்து, மார்ச் 29, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, தவக்கால ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 கிருமி நெருக்கடியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வயது முதிர்ந்தோரையும், மருத்துவமனைகளில் தனிமையாய் இருப்பவர்களையும், ஊதியம் கிடைக்காது என்பதை எதிர்நோக்கும் மற்றும், தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உணவளிப்பது என்பதை அறியாமல் திகைக்கும் பெற்றோர் போன்ற பலரை இத்திருப்பலியில் நினைத்துச் செபிப்போம் என்று, திருப்பலியின் ஆரம்பத்தில் கூறினார் திருத்தந்தை.

இந்நாள்களில் பலர் அழுதுகொண்டிருக்கின்றனர், நாமும் நம் இதயங்களால் அவர்களுடன் தோழமை கொள்வோம், நம் ஆண்டவர் தம் மக்கள் அனைவருக்காவும் கண்ணீர் சிந்தினார், நாமும், துன்புறும் மக்களுக்காகச் சிறிதளவு கண்ணீர் சிந்தினால் அது எத்தீங்கையும் நமக்கு கொணராது என்றும் திருத்தந்தை கூறி இஞ்ஞாயிறு திருப்பலியைத் துவக்கினார்.   

இயேசு நண்பர்களைக் கொண்டிருந்தார்

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான, இலாசர் உயிர்பெறுதல் (யோவா.11:1-45) பற்றி தன் மறையுரையில் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இயேசு எல்லார் மீதும் அன்புகூர்ந்தார், ஆயினும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர், அவர்களிலும், இலாசர், மார்த்தா, மற்றும், மரியாவுடன், அவர் ஒரு சிறப்பான உறவைக் கொண்டிருந்தார் என்று திருத்தந்தை கூறினார்

இயேசு தன் நண்பரின் நோய் மற்றும் இறப்பு பற்றி கேள்விப்பட்டு வேதனையடைந்தார், அவர் கல்லறைக்கு அருகில் சென்றார், அவரது உள்ளம் குமுறியது, இயேசு கண்ணீர் சொரிந்தார், கடவுளும் மனிதருமாகிய இயேசு அழுதார், இயேசு மற்றொரு கட்டத்தில் எருசலேம் பற்றி அழுதார், இயேசு எத்தகைய மென்மையான உள்ளத்துடன் அழுதார் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இயேசு தன் இதயத்திலிருந்து அழுதார், அவர் அன்பினால் அழுதார், இயேசு அழுவாரோடு அழுதார், அவர் எப்போதும் அன்பினால் அழுதார் என்று கூறினார்.

பரிவன்பு கொண்டிருந்தார்

இயேசு பரிவன்பு கொண்டார் என்பதை, நற்செய்தி, எத்தனையோ முறை குறிப்பிட்டுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இயேசு மக்களை நோக்கியபோதெல்லாம் அவர்கள் மீது பரிவன்பை உணராமல் அவரால் இருக்க முடிந்ததில்லை, அவரது கண்கள் அவரது இதயத்தோடு இணைக்கப்பட்டிருந்தன, இயேசு தன் கண்களால் பார்க்கிறார், ஆயினும் அவர் தன் இதயத்தால் பார்க்கிறார், அதனால் அவரால் கண்ணீர் சிந்த முடிந்தது என்று இஞ்ஞாயிறு மறையுரையில் விளக்கினார்.

நாம் கண்ணீர்சிந்த திறன் உடையவர்களா?

நம் மத்தியில் நிகழ்கின்ற அனைத்தோடும், தொற்றுக்கிருமியால் அழுகின்ற மக்கள் அனைவரோடும்  நம்மால் அழ முடிகின்றதா என்று சிந்தித்துப் பார்க்க, நம் எல்லாருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இயேசுவின் இதயம் போன்று எனது இதயம் இருக்கின்றதா? இது மிகக் கடினமாக இருந்தாலும்கூட, உதவி செய்வதற்காக என்னால் பேச முடியும் மற்றும், நன்மை செய்ய முடியும், எனது இதயம் செவிமடுக்கவில்லையெனில், அழுவதற்கு இயலவில்லையெனில், அதற்கு வரம் கேட்டு ஆண்டவரிடம் மன்றாடுவோம், ஆண்டவரே, நான் உம்மோடும், இப்போது துன்புறும் உம் மக்களோடும் அழுவதற்குத் தேவையான அருளைத் தாரும் என மன்றாடுவோம் என்று திருத்தந்தை கூறினார்.

கண்ணீரின் ஞாயிறு

இஞ்ஞாயிறு மறையுரையின் இறுதியில், இன்று பலர் அழுதுகொண்டிருக்கின்றனர் என்பதை நினைவுபடுத்தி, அழுவதற்கு வெட்கப்படாத இயேசுவோடு நாமும் அழுவதற்கு அவரின் அருளை இறைஞ்சுவோம், இஞ்ஞாயிறு உங்கள் எல்லாருக்கும், கண்ணீரின் ஞாயிறாக அமைவதாக என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆசை திருநற்கருணை செபம்

திருப்பலியை ஊடகங்களில் காண்போர் மற்றும், கேட்போர், ஆன்மீக முறையில் திருநற்கருணை வாங்குவதற்கு, புனித அல்போன்ஸ் லிகோரியார் உருவாக்கிய செபத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாள்களில் திருப்பலியில் திருநற்கருணை உட்கொண்ட பின்னர், செபிக்கிறார்.

என் இயேசுவே, திருநற்கருணையில் நீர் பிரசன்னமாய் இருக்கிறீர் என நான் நம்புகிறேன்.

அனைத்திற்கும் மேலாக நான் உம்மிடம் அன்புகூர்கிறேன்

உம்மை என் ஆன்மாவில் பெறுவதற்கு ஆவலாக உள்ளேன்.

இப்போது என்னால் உம்மை திருஅப்ப வடிவில் உட்கொள்ள இயலாது என்பதால்

எனது இதயத்தில் ஆன்மீக முறையிலாவது வாரும்.

நீர் ஏறக்னேவே எனது இதயத்தில் இருக்கின்றீர் என்பதுபோல் நான் உம்மை அரவணைக்கிறேன்.

நான் உம்மோடு முழுமையாக ஒன்றித்திருக்கிறேன்.

உம்மிலிருந்து நான் பிரிந்துசெல்ல என்னை ஒருபோதும் அனுமதியாதேயும், ஆமென்.

இந்நாள்களில் ஒவ்வொரு நாளும், இத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனையை வழிபாட்டை பத்து அல்லது, பதினைந்து நிமிடங்கள் நடத்தி, திருநற்கருணை ஆசீரும் அளிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலிகளில் இறுதியாக அன்னை மரியாவுக்குப் பாடல் ஒன்றும் பாடப்படுகின்றது.

29 March 2020, 10:00
அனைத்தையும் படிக்கவும் >