தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 280220 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 280220  (VaticanMedia)

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி

திருத்தந்தை தன் உடல்நிலையில் சிறிது தளர்ந்திருப்பதால், அவரின் இவ்வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ சந்திப்புகள் வேறொரு நாளைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், திருத்தந்தையின், சாந்தா மார்த்தா இல்லச் சந்திப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களைக் குறைத்து, இறைவார்த்தையை அதிகம் வாசித்து தியானிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று அழைப்பு விடுத்தார்.

பிப்ரவரி 26, இப்புதனன்று துவங்கியிருக்கும் தவக்காலத்தை நாம் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை, பிப்ரவரி 28, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தி வழியாக எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“தவக்காலம், இறைவார்த்தைக்கு அதிகநேரம் ஒதுக்க வேண்டிய காலம். தொலைக்காட்சிப் பெட்டியை மூடிவிட்டு, விவிலியத்தைத் திறக்க வேண்டிய காலம் இது. கைபேசிகளிலிருந்து நம்மை விலக்கி வைத்து, நற்செய்தியோடு நம்மை தொடர்புபடுத்த வேண்டிய காலம் இது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று பதிவாகியிருந்தன. 

திருத்தந்தையின் நிகழ்வுகள்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 28, இவ்வெள்ளி காலையில் வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அதன்பின்னர் அதில் பங்குகொண்ட விசுவாசிகளை வழக்கம்போல் சந்தித்து வாழ்த்தினார்.

திருத்தந்தை உடல்நிலையில் சிறிது தளர்ந்திருப்பதால், அவரின் இவ்வெள்ளிதின அதிகாரப்பூர்வ சந்திப்பு நிகழ்வுகள் வேறொரு நாளைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்றும், அதேநேரம், திருத்தந்தையின், சாந்தா மார்த்தா இல்லச் சந்திப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றும், திருப்பீட செய்தி தொடர்பாளர் Matteo Bruni அவர்கள், இவ்வெள்ளியன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

திருத்தந்தையின் ஒவ்வொரு நாளைய நிகழ்வுகள் இரண்டாவது நாளாக மாற்றப்பட்டுள்ளன என்று கூறிய Bruni அவர்கள், இவ்வியாழன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாத்தரன் புனித யோவான் பெருங்கோவிலில் அருள்பணியாளர்களைச் சந்திக்காதது பற்றி செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கையில், திருத்தந்தை தன் உடல் நிலையில் சிறிது தளர்ந்திருந்ததால், சாந்தா மார்த்தா இல்லத்திலேயே திருத்தந்தை இருக்க விரும்பினார் என்றும் கூறினார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 27, இவ்வியாழன் காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். பின்னர், அன்று காலை 9.30 மணியளவில், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களுடன் வந்திருந்த "கத்தோலிக்க சுற்றுச்சூழல் உலகளாவிய இயக்கம்" என்ற குழுவைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை, புனித 6ம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2020, 14:48
அனைத்தையும் படிக்கவும் >