தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா திருப்பலியின்போது  - 250220 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 250220 

திருஅவையில், மகத்துவத்தை அளப்பது தொண்டு, பதவிகள் அல்ல

உலகப்போக்கு, கடவுளின் பகைவன். உலகப்போக்கு உணர்வுக்கு எதிரான ஒரேயொரு பாதை தாழ்ச்சியாகும். மற்றவருக்குப் பணிவிடைபுரிதல் மற்றும், கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தலாகும். பதவி ஏணியில் ஏறுவது அல்ல

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

பேராசை, பொறாமை, புறங்கூறுதல், உலகப்போக்கு போன்றவற்றுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு, பிப்ரவரி 25, இச்செவ்வாய் காலை மறையுரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்ற இந்நாளைய நற்செய்தி வாசகத்திலிருந்து தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

பணிவாய் இருப்பதற்கு ஆண்டவர் நம்மை அழைத்திருப்பதால், உலகப்போக்கு கடவுளின்  பகைவன் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, நற்செய்தியின்படி வாழ்வதற்கு முயற்சிக்கையில், சமரசங்களை மேற்கொண்டால், உலகின் உணர்வில் ஊறிப்போய் விடுவோம், அந்நிலை அடுத்தவரை அதிகாரம் செய்ய இட்டுச்செல்லும், மற்றும், அது கடவுளின் பகைவன் என்று கூறினார்.

தொண்டாற்றும் பாதை

அதற்கு மாறாக, தொண்டாற்றும் பாதைக்கு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார் என்றுரைத்த திருத்தந்தை, சீடர்கள், தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்ததை இயேசு அறிந்திருந்தார், பதவிபெற விரும்பும் மனநிலை, உலகுப்போக்குடைய உணர்வாகும் என்று கூறினார்.

இச்செவ்வாய் திருப்பலியின் முதல் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு, உலகத்தோடு நட்புகொள்வது, கடவுளைப் பகைப்பதாகும் என்று சொல்வதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பொறாமை, மற்றவரை அழிப்பதற்கு இட்டுச்செல்லும் புழுவாகும் என்றும், பல போர்களும், பல சண்டைகளும், உலகப்போக்குடைய பேராசைகளிலிருந்தே பிறக்கின்றன என்றும் எடுத்துரைத்தார்.

உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? என்று திருத்தூதர் யாக்கோபு கூறுவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, உலகப்போக்கால் தாக்கப்பட்டுள்ளவர்கள், எப்போதும் உயரிய இடங்களுக்காக, பெரிய அங்கீகாரங்களுக்காக ஏங்கும் நிறுவனங்களில் வேலைசெய்பவர்கள் போன்றவர்கள் என்றும், இது, உலகின் உணர்வு, ஆனால் இது கிறிஸ்தவப் பண்பு அல்ல என்றும் கூறினார்.

திருஅவையில் மிக முக்கியமானவர்கள்

திருஅவையில் மிக முக்கியமானவர்கள் யார்? திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், மிக அழகான பங்குத்தளங்களின் அருள்பணியாளர்கள், பொதுநிலை கழகங்களின் தலைவர்கள் போன்றாரா? இல்லை, மாறாக, அனைவருக்கும் பணியாளர்களாக தங்களை ஆக்குபவர்கள் மற்றும், எல்லாருக்கும் தொண்டாற்றுகின்றவர்களே திருஅவையில் மிகவும் மேன்மையானவர்கள் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பதவி ஏணியில் ஏறுபவர்கள், பெரிய பதவிகளை வைத்திருப்பவர்கள், பெரியவர்கள் அல்ல என்றும், மிகவும் தாழ்ந்தவர்களை வரவேற்பவர்கள் மற்றும், அதிகம் தொண்டாற்றுபவர்களே பெரியவர்கள் என்றும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, உலகின் உணர்வுக்கு எதிரான ஒரேயொரு பாதை, தாழ்ச்சியாகும், மற்றவருக்கு சேவைபுரிவது மற்றும், கடைசி இடத்தைத் தேடுவதும் ஆகும் என்று விளக்கினார்.

“ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்ற இயேசுவின் திருச்சொற்களுடன் மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டுவிட்டர்

மேலும், இச்செவ்வாய் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

25 February 2020, 14:40
அனைத்தையும் படிக்கவும் >