தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 070220 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 070220  (Vatican Media)

தாழ்ச்சியில் வளர அவமானங்களைத் தாங்கவேண்டியிருக்கும்

இயேசுவும், திருமுழுக்கு யோவானும் சுட்டிக்காட்டும் தாழ்ச்சி எனும் பாதையை கிறிஸ்தவர்கள் பின்பற்றுமாறும், மேய்ப்பர்கள், உலகப்போக்கிற்கு இடம்கொடுக்க வேண்டாமென்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயேசுவும், திருமுழுக்கு யோவானும் சுட்டிக்காட்டும், தாழ்ச்சி எனும் பாதையை கிறிஸ்தவர்கள் எல்லாரும் பின்பற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில், தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

அவமானங்களைத் தாங்குவதற்கு அஞ்ச வேண்டாம், நாம் தாழ்ச்சியில் வளர, சில அவமானங்களை அனுப்புமாறு ஆண்டவரிடம் மன்றாடுவோம், அப்போது, இயேசுவை நம்மால் இன்னும் சிறப்பாக பின்பற்ற முடியும் என்றும், திருத்தந்தை கூறினார்.

பிப்ரவரி 07, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியில் மாற்கு நற்செய்தியிலிருந்து வாசிக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் இறப்பு பற்றிய நற்செய்தி வாசகத்திலிருந்து (மாற்.6,14-29) தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

இயேசுவின் வழி

திருமுழுக்கு யோவான், இயேசுவின் பாதையைக் காட்டுவதற்காகவே கடவுளால் அனுப்பப்பட்டார், இறைவாக்கினர்களில் இறுதியானவரான இவர், இயேசுவை, மெசியா எனச் சுட்டிக்காட்டும் அருளைப் பெற்றிருந்தார் என்று திருத்தந்தை கூறினார்

இயேசு வருவார் என்பது பற்றி அதிகமாகப் போதிக்காமல், அவருக்குச் சான்று பகரவும், தன்னைப்போல் உயிரையும் கையளிக்கவுமென, மக்களைத் தயாரித்ததே திருமுழுக்கு யோவானின் பணியாக இருந்தது என்று கூறியத் திருத்தந்தை, நம் மீட்புக்காக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைக்குச் சான்று பகரும் வழி, அவமானமடைதலாகும் என்றும் கூறினார்.

இயேசு, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் என்று, புனித பவுலடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார், இதுவே நமது வழி, கடவுள் கிறிஸ்தவர்களுக்குச் சுட்டிக்காட்டும் இந்த வழியில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்று திருத்தந்தை கூறினார்.

மிகவும் தாழ்த்தப்பட்ட முடிவு

இயேசுவும், திருமுழுக்கு யோவானும், சாத்தானால், தற்பெருமை எனும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், இவ்விருவரும் மக்கள்முன் அதிகாரத்தோடு போதித்தனர், அதேநேரம், இவ்விருவருக்கும், தங்களையே தாழ்த்திக்கொள்வதற்கு நேரங்களும் நேர்ந்தன என்று விளக்கிய திருத்தந்தை, இவ்விருவரின் மரணங்கள் எவ்வாறு இருந்தன என்பதையும் விளக்கினார்.

இயேசுவும், திருமுழுக்கு யோவானும் சுட்டிக்காட்டும் தாழ்ச்சி எனும் பாதையையே கிறிஸ்தவர்களாகிய நாமும் பின்செல்ல வேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணிவுள்ள மனதை வளர்த்துக்கொள்ள அவமானங்களையும் தாங்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

திருஅவையில், குழுமத்தில், ஓர் அதிகாரத்தில் இருக்கிறேன், ஏதோ ஒன்றில் இருக்கிறேன் என்று, நம்மையே நாம் காட்டிக்கொள்ள முயற்சிக்கையில், அந்தப் போக்கு உலகின் போக்காகும், அது உலகின் வழியாகும், மாறாக அது இயேசுவின் பாதை அல்ல என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மலைப்பொழிவு பேறுகள் தாழ்ச்சி எனும் பாதையையே காட்டுகின்றன, மேய்ப்பர்களுக்கு, பதவி உயர்வு பெறுவதற்குச் சோதனைகள் வரலாம், இது அநீதி, இதை சகித்துக்கொள்ள இயலாது என்றும், ஒரு மேய்ப்பர், தாழ்ச்சி எனும் பாதையைக் காட்டாவிடில், அவர் இயேசுவின் சீடர் அல்ல என்றும், திருத்தந்தை கூறினார்.

டுவிட்டர்

மேலும், இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியிலும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

பெண்களில் பிறந்தவர்களுள் மிகப்பெரிய மனிதரான திருமுழுக்கு யோவான் மற்றும், கடவுளின் மகன், ஆகிய இருவரும் அவமானம் எனும் பாதையைத் தேர்ந்துகொண்டனர். கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னேறிச் செல்வதற்கென கடவுள் இந்தப் பாதையை நமக்குக் காட்டுகிறார். அவமானங்களால் துன்புறாமல், ஒருவர், தாழ்ச்சியுள்ளவராக இருக்க இயலாது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

07 February 2020, 14:34
அனைத்தையும் படிக்கவும் >