தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 180220 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 180220  (Vatican Media)

பரிவன்பு நிறைந்த, திறந்த இதயத்தைக் கொண்டிருங்கள்

கடின இதயங்களை இலேசானதாக்கும் மருந்து, இறையாசீர் பற்றிய நினைவுகளே. கிறிஸ்தவர்கள், நேர்மை மற்றும், இரக்கம் நிறைந்த இதயத்தை உருவாக்க உதவும் மீட்பின் அருளை, மறக்காமல் வாழ வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

சுயநலத்தால் தன்னிறைவு பெற்றதாக எண்ணி, கல்லாகும் இதயத்திற்கு, மீட்பின் அருள் மறுக்கப்படுகிறது என இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்ற இறைவனின் விருப்பத்தை சுட்டிக்காட்டி, சுயநலத்தால் பலம்பெறும் இதயங்கள் இரக்கமற்றவைகளாக மாறுகின்றன என்றார்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மற்றும், மதக்கோட்பாடுகள்மீது மட்டும் தீவிர வெறி கொண்ட குழுக்கள் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இவர்களின் உள்ளங்களில் இறைத்திட்டங்களுக்கோ, இரக்கத்திற்கோ உரிய இடம் இருக்கவில்லை என்று கூறினார்.

இதயம் கடினமாகி, சுயநலப்போக்குகளுக்கு உட்படும்போது, சண்டைகளும், போர்களும், சகோதரக் கொலைகளும் தொடர்கின்றன, ஏனெனில், அங்கு இரக்கம் என்பது இல்லை எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் அனைவரும் கடினமானவைகளை நம் இதயங்களில் கொண்டுள்ளோம், அங்கு கடவுள் நுழைய முடியாத நிலை உள்ளது, ஆகவே, இயேசுவைப் போல் இரக்கம் நிறைந்த, திறந்த இதயத்தைக் கொண்டிருக்கும் அருளை வழங்குமாறு, இறைவனை வேண்டுவோம் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

18 February 2020, 14:41
அனைத்தையும் படிக்கவும் >