சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 130220 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 130220  (Vatican Media)

உலக வழியில் வழுக்கி விழுவதைக் குறித்து எச்சரிக்கை

சிறிது, சிறிதாக, சாலமோன், தன் பாவ வழியில் வழுக்கி விழுந்ததைப் போல, நாமும், பாவத்தின் உணர்வை சிறிது சிறிதாக இழந்து, பாவங்களில் சிக்கிக்கொள்கிறோம் – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலக ஈர்ப்புக்களின் காரணமாக, இறைவனை விட்டு விலகி, அவரை மறுதலிக்கும் அளவுக்கு நாம் மாறிவிடக்கூடும் என்ற எச்சரிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 13, இவ்வியாழனன்று வழங்கிய மறையுரையில் விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், சாலமோன் முதுமை அடைந்தபோது, இறைவனை மறந்து வாழ்ந்த நிலையை விளக்கும் வாசகத்தை (1 அரசர்கள் 11:4-13) மையப்படுத்தி, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தன் இளமையில், 'நல்லப் பையனாக' வாழ்ந்த சாலமோன், இறைவனிடம் ஞானத்தை மட்டுமே வேண்டி பெற்று, அந்த ஞானத்தைக் கொண்டு, சேபா நாட்டு அரசி, மற்றும், நாட்டிலிருந்த அனைத்து அறிஞர்களையும், வியப்பில் ஆழ்த்தினார் என்பதை, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

சாலமோன் வாழ்ந்த காலத்தில், பல மனைவியருடன் வாழ்வது, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமுதாய பழக்கம் என்றாலும், அந்த மனைவியர் வழியே பல்வேறு தெய்வங்களை வழிபட ஆரம்பித்தது, அவரை நேரிய வழியிலிருந்து திசை மாறச் செய்தது என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

சிறிது, சிறிதாக, சாலமோன், தன் பாவ வழியில் வழுக்கி விழுந்ததைப் போல, நாமும், பாவத்தின் உணர்வை சிறிது சிறிதாக இழந்து, பாவங்களில் சிக்கிக்கொள்கிறோம் என்று தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணம், பெருமை, அகந்தை என்ற பொய் கடவுள்களை நாம் வழிபடுகிறோம் என்று கூறினார்.

"எல்லாரும் இவ்வாறு செய்கின்றனர்; இது மிகச்சிறந்த வழி இல்லைதான், இருந்தாலும், கவலைப்படவேண்டாம்" என்பன போன்ற சமாதானங்களை நமக்குள் நாமே சொல்லிக்கொண்டு, நம் பாவ வழிகளை நியாயப்படுத்த முயல்கிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

பாவ வழியில் நாம் வழுக்கிச் செல்கிறோம் என்பதை உணரும் அத்தருணத்தில் விழித்தெழும் வரத்தை நாம் இறைவனிடம் இறைஞ்சுவோம் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2020, 14:33
அனைத்தையும் படிக்கவும் >