தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 070120 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 070120 

கடவுளில் நிலைத்திருப்பதற்கு தூய ஆவியாரிடம் வரம்

ஒருவர் மிகவும் பாவம் மலிந்த நகரங்களிலும், கடவுள் நம்பிக்கையற்ற சமுதாயங்களிலும் வாழலாம், ஆனால் அவரின் இதயம் கடவுளில் நிலைத்திருந்தால், அவர் மீட்பைக் கொணர்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஊழலுக்கு நம்மை இட்டுச்செல்லும் உலகின் போக்குகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென, இச்செவ்வாய் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்மஸ் கால விடுமுறைக்குப்பின், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், சனவரி 7, இச்செவ்வாய் காலையில், மீண்டும் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளில் நிலைத்திருப்பது பற்றி, இந்நாளைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் கூறுவதை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

கடவுள் நம்மில் நிலைத்திருக்கிறார் என்பதை, தூய ஆவியாரே உறுதி செய்கிறார் என்றும், விசுவாசத்தை, இவ்வுலகின் உணர்வுகளுக்கு நாம் வளைந்துகொடுக்க வேண்டியதில்லை,

ஏனெனில், தீமையிலிருந்து நன்மையைப் பிரித்துப்பார்க்கத் தெரியாத அளவுக்கு, அது நம்மை தன்னுணர்வற்ற நிலைக்கு உட்படுத்தும் என்றும், திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியார், புறாவாக

உலகின் போக்கைப் பின்பற்றி அல்ல, மாறாக, தூய ஆவியாரைப் பின்பற்றி, கடவுளில் நிலைத்திருப்பதே கிறிஸ்தவ வாழ்வு என்றும், உலகின் போக்கு, ஊழலுக்கு இட்டுச் செல்லும் மற்றும், தீமையிலிருந்து நன்மையைப் பிரித்துப்பார்க்க வைக்காது என்றும் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தில் பல கிறிஸ்தவர்களுக்கு, தூய ஆவியார், புறாவாக மட்டுமே உள்ளார் என்றும் கூறினார்.

ஒருவர் மிகவும் பாவம் மலிந்த நகரங்களிலும், கடவுள் நம்பிக்கையற்ற சமுதாயங்களிலும் வாழலாம், ஆனால் அவரின் இதயம் கடவுளில் நிலைத்திருந்தால், அந்த மனிதர் மீட்பைக் கொணர்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, கடவுளில் நிலைத்திருப்பதற்கு தூய ஆவியாரிடம் வரம் கேட்டு மன்றாட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒரு கிறிஸ்தவ நாட்டிலுள்ள, ஒரு சுற்றுலா நகரில், இந்த புத்தாண்டு, மிகவும் உலகப்போக்குடன், பணத்தையும், பல பொருள்களையும் விரயம் செய்து கொண்டாடப்பட்டதை, ஓர் அருள்பணியாளர் குறும்படமாக தன்னிடம் காட்டினார் என்றும்,

இப்படியான உலகப்போக்கு, பாவத்தைவிட மோசமானது, அது ஊழல் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டார்.

ஒருவருக்கு பாவம் பற்றிய உணர்வு இருந்து, அதற்காக கடவுளிடம் மன்னிப்புக்காக இறைஞ்சினால், அது கடவுளிடமிருந்து அவரை விலக்கி வைக்காது என்றும், அதேநேரம், உலகின் போக்கு, பாவம் என்றால் என்ன என்பதை மறக்கடிக்கும் என்றும் கூறிய திருத்தந்தை, தூய ஆவியார் கடவுளிடம் உங்களை வழிநடத்திச்செல்கிறார், உங்களைப் பாதுகாத்து, நீங்கள் விழித்தெழ உதவுகிறார் என்றும் கூறினார்.

எனவே ஆண்டவரில் நிலைத்திருக்க, தூய ஆவியாரின் அருளுக்காக வேண்டுவோம், நம் இதயங்கள், நாமும் கடவுளும் சந்திக்கும் இடங்களாக அமையட்டும் என்று சொல்லி மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2020, 14:47
அனைத்தையும் படிக்கவும் >