சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 200120 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 200120  (Vatican Media)

கீழ்ப்படிய மறுப்பதிலிருந்து துவங்கும் ஊழலின் வடிவங்கள்

கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதிலிருந்து, ஊழலின் பல்வேறு வடிவங்கள் துவங்குகின்றன – திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எப்போதும் புதிதாகவே இருக்கும் இறைவனின் வார்த்தைக்கு இன்முக வரவேற்பளித்து, அதனுடன் இணைந்திருத்தலின் அவசியம் குறித்து, சனவரி 20, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, சாமுவேல் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறைவனின் வார்த்தையைக் கேட்டு கீழ்ப்படியாமல் இருந்ததே, மன்னன் சவுலின் பாவம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தோற்கடிக்கப்பட்ட மக்களிடமிருந்து எதையும் எடுக்கக்கூடாது என்று இறைவன் கட்டளையிட்டிருந்தும், சவுல் அதை மீறி செயல்பட்டார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதிலிருந்து, ஊழலின் பல்வேறு வடிவங்கள் துவங்குகின்றன என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, அதற்கு எடுத்துக்காட்டாக, சவுலின் படைவீரர்கள், எதிரிகளின் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து இறைவனுக்குப் பலியிட்டதை, தன் தரப்பு வாதமாக சவுல் முன்வைத்ததை குறிப்பிட்டார்.

ஆண்டவருக்குக் கீழ்ப்படிதல், எரிபலிகளைவிட சிறந்தது என்று இறைவாக்கினர் சாமுவேல் சவுலுக்கு எடுத்துரைத்து, தனக்குத் தெரிந்த நியாயத்தில் விடாப்பிடியாக இருந்து, ஆண்டவரின் சொல்லுக்கு கீழ்படியாதிருந்ததாலேயே சவுல் தன் மன்னர் பதவியை இழந்தார் என்று கூறியதை, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2020, 15:32
அனைத்தையும் படிக்கவும் >