சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 280120 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 280120  (Vatican Media)

மனமகிழ்வற்ற கிறிஸ்தவர்கள் பலன்தர இயலாது

கடவுளைச் சந்திப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வெட்கப்பட வேண்டாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கடவுளைச் சந்திப்பதிலும், அவர் தமக்கு நெருக்கமாய் இருக்கிறார் என்பதிலும் கிடைக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வெட்கப்பட வேண்டாம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் தன் மறையுரையில் கூறினார்.

முழுமகிழ்வுடன் இருக்கின்ற நற்செய்தி அறிவிப்பாளர்களுடன் மட்டுமே, நற்செய்தி முன்னோக்கிச் செல்லும் என்றும், இந்த மகிழ்வு, குடும்பத்தில், ஆண்டவரோடு இணைந்து உணவருந்தும் மேஜையிலும் தொடர்கின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

சனவரி 28, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஆண்டவரின் பேழை பகைவரால் கைப்பற்றப்பட்ட பின்னர், எருசலேமிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டதை, தாவீதும், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் கொண்டாடியது பற்றிய நிகழ்வை மையப்படுத்தி தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

கடவுள் அருகிலிருப்பதைக் கொண்டாடுதல்

கடவுள் தங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறார் என்பதை உணர்ந்த மக்கள் அதைக் கொண்டாடினர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, இந்தக் கொண்டாட்ட பவனியை வழிநடத்திச் சென்ற அரசர் தாவீது, ஒரு காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும் பலிகொடுத்தார், அவர், தம் முழு வலிமையோடு மக்களோடு சேர்ந்து எக்காள முழக்கத்தோடு ஆடிப் பாடினார் என்று கூறினார்.

உண்மையில், கடவுள் அவர்களோடு இருந்ததே அவர்களின் கொண்டாட்டத்திற்குக் காரணம், தாவீது, மக்கள் முன்னிலையில் வெட்கப்படாமல், தம் மகிழ்வை வெளிப்படுத்தி நடனமாடினார், ஆண்டவரைச் சந்திப்பது, அவர் தம் மக்களிடம் திரும்பி வருவது, ஓர் ஆன்மீக மகிழ்வாகும், தாவீது, ஆண்டவரை அன்புகூர்ந்தார், ஆண்டவரின் பேழை திரும்பி வந்தது குறித்து மகிழ்ந்தார், மற்ற மக்களைப் போன்று, அக்களிப்போடு பாடினார், மற்றும், நடனமாடினார் என்று மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

மகிழ்வான நற்செய்தி அறிவிப்பாளர்கள் முன்னோக்கி..

நம் பங்குத்தளங்களில் அல்லது, கிராமங்களில் ஆண்டவரோடு இருக்கையில் இதே மகிழ்வை நாமும் அனுபவித்து கொண்டாடுகிறோம் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, கொண்டாட்டம், இந்த மகிழ்வு, ஆன்மீக வழியில் மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை, அது பகிர்தலாகவும் மாறுகிறது என்றும் கூறினார்.

தாவீது மக்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய பின்னர், ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப்பழ அடையையும் கொடுத்தார், இதனால், ஒவ்வொருவரும் தம் தம் வீடுகளில் அதனைக் கொண்டாட முடியும், இறைவார்த்தை, கொண்டாட்டம் பற்றி வெட்கப்படுவதில்லை, அதேநேரம், இதுவே எல்லாம் என்று நம்பி, எல்லையை மீறிச் செல்லும் மகிழ்வின் ஆபத்து பற்றியும் திருத்தந்தை எச்சரித்தார்.

மனதில் மகிழ்வின்றி ஒரு கிறிஸ்தவர் பலனளிக்க முடியாது, இறைவார்த்தையைப் பெறுவதில், கிறிஸ்தவராய் இருப்பதில், முன்னோக்கிச் செல்வதில், வெட்கப்படாமல் கொண்டாடும் திறனை வளர்ப்பதில் மகிழ்வடையுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

டுவிட்டர் செய்தி

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நற்செய்தி, சோர்வடையச் செய்யும், கசப்படையச் செய்யும் நற்செய்தி அறிவிப்பாளர்களுடன் முன்னோக்கிச் செல்லாது, மாறாக, வாழ்வை, மகிழ்வுடன் மற்றும், முழுமையாய் வாழ்கின்ற நற்செய்தி அறிவிப்பாளர்களுடன் மட்டுமே முன்னோக்கிச் செல்லும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2020, 14:55
அனைத்தையும் படிக்கவும் >