சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி -300120 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி -300120  (Vatican Media)

நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ...

நம்மையும், அடுத்தவரையும், உலகின் அனைத்தையும் அளப்பதற்கு நாம் கையாளும் அளவுகோல்களை, இறைவன் நமக்கும் பயன்படுத்துவார் – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒருவர் கிறிஸ்தவரா என்பதை வரையறுக்க, அவர் தாராள மனம் கொண்டிருப்பதையும், அன்புகூருவதையும் நாம் அளவுகோலாக பயன்படுத்தும்போது, அதே அளவுகோலை நமக்கு நாமே பயன்படுத்துகிறோமா என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் எழுப்பினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:21-25), "நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்" என்று இயேசு கூறும் கருத்தை, தன் மறையுரையின் மையக்கருத்தாகப் பகிர்ந்துகொண்டார்.

நாம் ஒவ்வொருவரும் நம்மையும், அடுத்தவரையும், உலகின் அனைத்தையும் அளப்பதற்கு தனிப்பட்ட வழிமுறைகளைக் கையாள்கிறோம் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கையாளும் அளவுகோல்களை இறைவன் நமக்கும் பயன்படுத்துவார் என்று நினைவுறுத்தினார்.

தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டு அளப்பவர்கள், அதே அளவுகோலால் அளக்கப்படுவர் என்றும், பரிவின்றி, அடுத்தவரை மிதித்து, ஏறிச்செல்வோர், பரிவற்ற முறையில் அளக்கப்படுவர் என்றும், திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

நம் வாழ்வையும், அடுத்தவர் வாழ்வையும் அளப்பதற்கு நாம் பயன்படுத்தும் அளவுகோல்கள், கிறிஸ்தவ விழுமியங்களைச் சார்ந்த அளவுகோல்களா, அல்லது, உலகைச் சார்ந்த அளவுகோல்களா என்பதை நாம் ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்வது பயனளிக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

தன் மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் (மாற்கு 4:24). நாம் சிலுவையைக் கண்டு அஞ்சாதிருக்கவும், இழிவுபடுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் வரம் வேண்டுவோம். ஏனெனில், இதுவே அவர் தெரிவு செய்த வழியாகும்" என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2020, 14:44
அனைத்தையும் படிக்கவும் >