தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை - பொறாமை, போருக்கு இட்டுச்செல்லும்

தவறான தீர்ப்புகளுக்கும், போட்டிகளுக்கும் இட்டுச்செல்லும் பொறாமை எனும் புழு குறித்து எச்சரிக்கையாயிருங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மற்றவரைத் தவறாகத் தீர்ப்பிடுவதற்கும், போட்டி மனப்பான்மைக்குள் நுழைவதற்கும், புறணி பேசுதலில் நம்மையே உட்படுத்துவதற்கும் இட்டுச்செல்லும், பொறாமை மற்றும், பகை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில், தன் மறையுரையில் கூறினார்.

சனவரி 24, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாவீது மீது, அரசர் சவுல் கொண்டிருந்த பொறாமை, எவ்வாறு மறைந்தது என்பது பற்றி விளக்கும், இத்திருப்பலியின் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

பொறாமையும், பகையும், ஒருவர் தனக்குள்ளே உரையாட இட்டுச் செல்கின்றன, அவை பிறரைக் கொலை செய்கின்றது, உண்மையில், அதைப் பற்றி நாம் நினைத்துப் பார்த்தால், அவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இருப்பதாகத் தெரியாது என்று, திருத்தந்தை கூறினார்.

பொறாமையின் ஓய்வற்றநிலை

சவுல் ஆயிரம் பேரை மட்டுமே கொன்றார், ஆனால் தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார் என்று, இளம்பெண்கள் தாவீதின் வெற்றியைக் குறித்து பாடியதே சவுலின் பொறாமைக்குக் காரணம் என்றும், இங்கிருந்தே, பொறாமை ஓய்வின்றி இருக்கத் தொடங்கியது, இதன் விளைவாக, தாவீதைக் கொல்வதற்கு சவுல் தன் படையிடம் கூறினார் என்றும், திருத்தந்தை மறையுரையாற்றினார்.   

பொறாமைகள் குற்றவாளிகள், அவை எப்போதும் அடுத்தவரை கொல்லவே முயற்சிக்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, ஒருவர் தன் நாவால் அடுத்தவரை எளிதாகக் கொல்ல முடியும் என்று கூறினார்.

பொறாமைப்படுபவர்கள், எதார்த்தத்தைப் பார்ப்பதற்கு திறனற்றவர்கள் என்றும், சவுலில் இருந்த பொறாமையே, தாவீதை, ஒரு கொலைகாரர், எதிரி என நம்ப வைத்தது என்றும், பொறாமை சோப்பு நுரை போன்று வெடிக்கும்போது, அச்சூழலின் உண்மைநிலையைக் காண, கடவுள் நமக்கு அருள் வழங்குகிறார் என்றும் கூறியத் திருத்தந்தை, நம்மையே நாம் பரிசோதித்துப் பார்ப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

நம் இதயங்கள், பொறாமை எனும் புழுவிலிருந்து காப்பாற்றப்படவும், அன்புநிறைந்த, ஒளிவுமறைவற்ற நாம் இதயத்தைக் கொண்டிருக்கவும், கடவுளிடம் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

டுவிட்டர் டசெய்தி  

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 24, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #OmeliaSantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“பொறாமையும், பகையும் போரைப் பிறப்பிக்கின்றன, தாவீதைப்போல, ஒளிவுமறைவற்ற, நீதி மற்றும், அமைதியைத் தேடுகின்ற ஓர் இதயத்தைக் கொண்டிருக்க ஆண்டவரிடம் மன்றாடுவோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2020, 15:47
அனைத்தையும் படிக்கவும் >