தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 100120 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 100120  (Vatican Media)

அன்பு, நன்மை செய்வதில் தன்னை வெளிப்படுத்துகின்றது

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, அன்பு, உறுதியான செயல்கள் வழியாக, எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது என்பது பற்றி விளக்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அன்பு உறுதியான செயல்களில் வெளிப்படுவது, மற்றும், நன்மை செய்வதில் அது தன்னை வெளிப்படுத்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 10, இவ்வெள்ளியன்று காலை திருப்பலியில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, அன்பு பற்றி புனித யோவான் எழுதிய முதல் திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

திருத்தூதர் யோவான், அன்பு என்றால் என்னவென்பதைப் புரிந்துகொண்டு அதை அனுபவித்தவர், அந்த அன்பாலே அவர் இயேசுவின் இதயத்தில் நுழைந்தவர் என்றுரைத்த திருத்தந்தை, நாம் எவ்வாறு அன்புகூர்கிறோம், நாம் எவ்வாறு அன்புகூரப்பட்டுள்ளோம் என்பதையும், யோவான் தன் திருமடலில் விளக்கியுள்ளார் என்று கூறினார்.

கடவுள் நம்மை முதலில் அன்புகூர்கிறார்

இரு காரியங்களை தன் மறையுரையில் தெளிவுபடுத்திய திருத்தந்தை, முதலில் கடவுள் நம்மை அன்புகூர்ந்ததால், நாம் அவரை அன்புகூர்கிறோம் என்பதே, அன்பின் அடித்தளம், மற்றும், அன்பின் ஆரம்பம் என்று கூறினார்.

கடவுள் நம்மை அன்புகூரவில்லையெனில், நம்மால் நிச்சயமாக அன்புகூர இயலாது என்று எடுத்துரைத்த திருத்தந்தை, அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, பிறந்து ஒருசில நாள்களே ஆகியுள்ள ஒரு குழந்தைக்குப் பேச முடிந்தால், தான் பெற்றோரால் அன்புகூரப்படுவதாக உணர்வதை நிச்சயமாக வெளிப்படுத்தும், இதுவே அன்பிற்குத் தெளிவான விளக்கம் என்பதைக் குறிப்பிட்டார்.

கடவுள் நம்மை அன்புகூர்வது போன்றே, பெற்றோர் தங்களின் குழந்தையை அன்புகூர்கின்றனர் என்றும், கடவுள் நம்மை முதலில் அன்புகூர்வதால், அன்புகூரும் நம் திறமை அதிகரிக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார். 

கடவுளை அன்புகூர்கிறேன் என்று சொல்லிவிட்டு, சகோதரரை வெறுத்தால்...

கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர் (1யோவா.4,20) என்று, திருத்தூதர் யோவான் கூறுகிறார் என்று தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொய்யராக இருப்பது, சாத்தானின் வழியில் செல்வதாகும் என்பதை விவிலியம் தெளிவாகச் சொல்கிறது என்று விளக்கினார்.

தாங்கள் அன்புகூராமல் இருப்பதற்கு பல காரணங்களால் அதை நியாயப்படுத்தலாம், ஆனால் இதற்கு யோவான் தெளிவான பதிலைத் தருகிறார் என்று கூறியத் திருத்தந்தை, அன்பு ஒவ்வொரு நாளும் தெளிவான செயல்களால் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். அன்புகூர நமக்குத் தடைகளாக இருக்கும் இவ்வுலகின் மனநிலையை நம்பிக்கையால் மேற்கொள்ள முடியும் என்றும், நாம் முதலில் கடவுளால் அன்புகூரப்பட்டுள்ளதால், நம் சகோதரர்களை அன்புகூரத் துணிச்சலைப் பெறுகிறோம் என்ற உண்மைகளை ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுப்பாராக என்றும் கூறி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2020, 15:13
அனைத்தையும் படிக்கவும் >