தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி  (Vatican Media)

வாழ்வுக்கு மிக முக்கியம், கடவுளோடு உறவு கொண்டிருப்பது

உடல் நலம் ஒரு கொடை. அதை நாம் காத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், நம் இதய நலத்தையும், ஆன்ம நலத்தையும் காத்துக்கொள்ள வேண்டுமென்று, ஆண்டவர் நமக்கு கற்பிக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆன்மாவின் நோய்கள் குணப்படுத்தப்பட வேண்டும் மற்றும், அதற்கான மருந்து மன்னிப்பு கேட்பதாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 17, இவ்வெள்ளி காலை, திருப்பலியில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை, இத்திருப்பலியில் மாற்கு நற்செய்தியிலிருந்து வாசிக்கப்பட்ட (மாற்.2,1-12), இயேசு, முடக்குவாதமுற்ற ஒருவரைக் குணமாக்கும் நிகழ்வை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.

கப்பர்நாகுமில் இயேசு இருந்த வீட்டில், மக்கள் திரண்டிருந்ததால், அவரை அணுக இயலாமல், அவர் இருந்த இடத்திற்கு மேலே, வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரை நால்வர் படுக்கையோடு கீழே இறக்கினர் என்றும், அவர்களுடையே நம்பிக்கையைக் கண்டு இயேசு, முடக்குவாதமுற்றவரிடம், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என கூறினார் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்ற இயேசுவின் திருச்சொற்களை மையப்படுத்தி முதலில் உரையாற்றிய திருத்தந்தை, பின்னர் இயேசு அவரிடம், நீ எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு உனது வீட்டுக்குப்போ என்று கூறினார், இந்த நிகழ்வில் இயேசு வாழ்வுக்கு மிக முக்கியமானது எது என்பதை போதிக்கிறார் என்று எடுத்துரைத்தார்.

உடல் நலம் ஒரு கொடை. அதை நாம் காத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், நம் இதய நலத்தையும், ஆன்மீக நலத்தையும் காத்துக்கொள்ள வேண்டுமென்று, ஆண்டவர் நமக்கு கற்பிக்கிறார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.

ஆன்மாவின் நலத்தை நாம் மறந்துவிடுகிறோம், அதைக் குணமாக்கும் மருத்துவரிடம் நாம் செல்வதில்லை என்று கூறியத் திருத்தந்தை, நம் பாவங்கள், தவறுகள் மன்னிக்கப்படும் மருந்தில் நாம் பழக்கப்பட்டு விடுகிறோம் என்று கூறினார்.

உன் பாவங்களை மன்னிக்க நான் விரும்புகிறேன் என நம் ஒவ்வொருவரிடமும் இயேசு சொல்கிறார், ஆன்மாவின் நோய்களிலிருந்து குணமாக்கப்பட மருந்து அவசியம், அதுவே மன்னிப்பு என்று திருத்தந்தை கூறினார்.

டுவிட்டர் செய்தி

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலையில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஸ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இயேசு முடக்குவாதமுற்ற ஒருவரை நோக்கினார், மற்றும், முக்கியம் எது என்பதில் கவனம் செலுத்தினார். அதுவே "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதாகும். உடல் நலம் ஒரு கொடை. அதை நாம் காத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், நம் இதய நலத்தையும், ஆன்மீக நலத்தையும் காத்துக்கொள்ள வேண்டுமென்று, ஆண்டவர் நமக்கு கற்பிக்கிறார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று வெளியாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2020, 15:24
அனைத்தையும் படிக்கவும் >