சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  (@VaticanMedia)

கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு கட்டணம் செலுத்துவதில்லை

கிறிஸ்தவ புனிதத்துவம் என்பது, எந்தவித எதிர்பார்ப்புமின்றி, ஆண்டவரிடமிருந்து நாம் பெற்ற கொடையைப் பாதுகாப்பதில் அடங்கியுள்ளது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

நாம் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு கட்டணம் செலுத்தவில்லை, மாறாக, அது கடவுளின் கொடை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரையாற்றினார்.

சனவரி 21 இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர் சாமுவேல் இஸ்ரயேலரின் அரசராக தாவீதைத் தேர்ந்தெடுத்தது பற்றிய இத்திருப்பலியின் முதல் வாசகம்(1சாமு.16,1-13°), மற்றும், என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடித்தேன் என்ற பதிலுரைப் பாடலை (தி.பா.89) மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

கிறிஸ்தவராக, அருள்பணியாளராக அல்லது ஆயராக இருப்பது, ஆண்டவரிடமிருந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி வழங்கப்படும் கொடையாகும், அதை நாம் விலைகொடுத்து வாங்குவதில்லை, உண்மையில், புனிதத்துவம் என்பது, இலவசமாகப் பெற்ற கொடையைப் பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்றும், திருத்தந்தை கூறினார்.   

தாவீது தன் சகோதரர்கள் மத்தியில் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வை விளக்கிய திருத்தந்தை, கடவுள் ஒருவரை நியமிக்கும்போது அவரின் சுதந்திரத்தையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தன்மையையும் வெளிப்படுத்துகிறார், எனவே, நாம் யார், நம்மை ஏன் கடவுள் தேர்ந்தெடுத்தார் என்று, நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்குமாறு அழைப்பு விடுத்தார்.

தூய ஆவியார் திருப்பொழிவு செய்வது இலவசக்கொடை, அந்தக் கொடையைப் பாதுகாப்பது கிறிஸ்தவர்களின் புனிதத்துவம் என்றும், மறையுரையில் திருத்தந்தை கூறினார்.

டுவிட்டர் செய்தி

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஸ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும், திருமுழுக்கு வழியாக, ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளோம். இது தூய்மையான கொடை. இந்தக் கொடையை பிரமாணிக்கத்துடன் பாதுகாத்துக்கொள்ள தூய ஆவியாரிடம் மன்றாடுவோம். இதுவே கிறிஸ்தவ புனிதத்துவம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2020, 15:17
அனைத்தையும் படிக்கவும் >