தேடுதல்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி மறையுரை - 101219 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி மறையுரை - 101219  (Vatican Media)

காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடித்த இறைவனின் மகிழ்வு

ஆட்டுக்குட்டியைத் தோளில் சுமந்துசெல்லும் நல்லாயனைப்போல், இறைவன் தம் மக்களை வழிநடத்தி, ஆறுதலளித்து, ஒரு தந்தைக்குரிய அக்கறையுடன் தண்டிக்கவும் செய்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்  செய்திகள்

தன்னிடம் மன்னிப்பை வேண்டி வருவோரை ஆரத்தழுவி அவர்களுக்கு ஒப்புரவு அருளின் பாதையை திறக்கும் நல்மேய்ப்பர் இறைவன் என, இச்செவ்வாய்க்கிழமை காலை வழங்கிய மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய் ஆட்டை  வழி நடத்தும் அதேவேளை, ஆட்டுக்குட்டியைத் தோளில் சுமந்துசெல்லும் நல்லாயனைப்போல், இறைவன் தம் மக்களை வழிநடத்தி, ஆறுதலளித்து, ஒரு தந்தைக்குரிய அக்கறையுடன் தண்டிக்கவும் செய்கிறார் என்று கூறினார்.

இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம் (மத். 18:14) என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை, தன்னை ஆறுதல்படுத்த அனுமதிக்கும் ஒவ்வொருவரையும், இறைவனே முன்வந்து ஆறுதல்படுத்துகிறார் என்றார்.

ஒரு பாவி மன்னிப்பை வேண்டி இறைவனை அணுகும்போது, இறைவனிடம் உருவாகும் மகிழ்ச்சி, அவரை இளகிய இதயமுடையவராக மாற்றுகின்றது என்று தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, 'காணாமற்போன மகன்' உவமையில், மகனுக்காக காத்திருக்கும் தந்தை, மகன் திரும்பி வந்ததும், அவனை பேசவிடாமல், அவன் திரும்பி வந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதிலேயே கவனமாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

காணாமல்போன ஓர் ஆட்டைக் கண்டுபிடித்த இறைவனின் மகிழ்வு, தன்னிடமுள்ள 99 ஆடுகள் குறித்த மகிழ்வைவிட அதிகமாக இருக்கும் என்பதால், பாவிகளாகிய நாம் அவரின் மன்னிப்பை வேண்டி அவரை நோக்கிச் செல்வோம் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2019, 16:05
அனைத்தையும் படிக்கவும் >