தேடுதல்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி -031219 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி -031219  (Vatican Media)

இன்று திருஅவை சிறுபிள்ளையின் மனநிலையைப் போற்றுகின்றது

ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தில், விசுவாசிகள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் போன்ற எல்லாரும், தாழ்மையும், எளிமையும் கொண்ட பாதையைத் தேர்ந்துகொள்ளாவிடில், அங்கே எதிர்காலம் கிடையாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

தாழ்மையான இதயத்தில் மட்டுமே, கடவுளின் ஆவி துளிர்விட முடியும், கடவுளில் நம்பிக்கை வைத்து, சவால்களை எதிர்கொள்ள சக்தி கொண்டிருக்கும் எளிய, தாழ்மையான இதயங்களிலே, கடவுளின் வெளிப்பாடு எப்போதும் துவங்குகிறது என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாயன்று மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 03, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்மையான, எளிய மனநிலை மற்றும், எளிய காரியங்கள் பற்றிப் பேசும் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து (எசா.11,1-10) எடுக்கப்பட்ட முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

ஆண்டவர் வரும் அந்நாளில், ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்... ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்... என்று, முதல் வாசகம் ஒலிக்கின்றது என்று கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தை, எளியவற்றையே போற்றுகின்றது என்று கூறினார்.

உலகில் மீட்பு, வெளிப்பாடு, கடவுளின் பிரசன்னம் ஆகிய அனைத்தும் எளிய, காரியங்களிலிருந்தே துவங்குகின்றன என்றும், இறைத்தந்தை, இறையாட்சியை, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதால், அவரை இயேசு போற்றினார் என்றும், கிறிஸ்மஸ் பெருவிழாவன்று குடிலுக்குச் செல்கிறோம், அங்கே, கடவுளின் எளிமையைக் காண்கிறோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

எளிமையான பாதை

கிறிஸ்தவ சமுதாயத்தில், விசுவாசிகள், ஆயர்கள், மற்றும், அருள்பணியாளர்கள், இந்த எளிமையான பாதையைத் தேர்ந்துகொள்ளாவிடில், எதிர்காலம் கிடையாது, வரலாற்றில் பெரிய திட்டங்களில் இதை நாம் காண்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை, கர்வமுள்ள, தன்னிறைவு கொண்ட, பெரிய இதயங்களில் ஆண்டவரின் ஆவியால் நுழைய முடியாது என்பதால், அது எளிமையானவற்றையே எப்போதும் தேர்ந்துகொள்கின்றது என்றும் கூறினார்

கிறிஸ்தவர்கள், தங்களின் சொந்த சிறுமையை ஏற்கும் அதேவேளை, உலகின் சவால்கள் மத்தியில், கோழைகளாக நடந்துகொள்ளக் கூடாது, பெரிய காரியங்கள் பற்றி அஞ்சக் கூடாது என, புனித தாமஸ் அக்குய்வினாஸ் அவர்களும், இன்று நாம் விழா எடுக்கும் புனித பிரான்சிஸ் சவேரியாரும் சொல்கின்றனர் என்றும், திருத்தந்தை கூறினார். 

தான் எப்போதும் சிறாரிடம் ஒப்புரவு அருளடையாளத்தைக் கேட்க விரும்புவதாகவும், ஏனெனில் அவர்கள், உண்மையானவற்றைச் சொல்வார்கள் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் பெரிய காரியங்கள் ஆற்ற அஞ்சாமல் இருக்கும் வரத்தை தூய ஆவியாரிடம் வேண்டுவோம் என மறையுரையை நிறைவு செய்தார்.

டுவிட்டர்

மேலும், இச்செவ்வாயன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta  என்ற ஹாஸ்டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று திருஅவை சிறுபிள்ளையின் மனநிலையைப் போற்றுகின்றது, கடவுளின் பணிகள், சிறிய காரியங்களிலிருந்து, ஒரு விதையிலிருந்து துளிர்விடுகின்றது, இறையாட்சியில், ஆண்டவரின் வெளிப்பாடுகளுக்குத் திறந்த மனம் உள்ள தாழ்மையான, எளிய உள்ளம்  பற்றி இயேசு பேசுகிறார் என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2019, 14:55
அனைத்தையும் படிக்கவும் >