தேடுதல்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 051219 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 051219  (ANSA)

திருத்தந்தையின் மறையுரை – பாறைமீது கட்டப்படும் வாழ்வு

நம் வாழ்வின் அடித்தளம் என்ன என்பதை ஆய்வு செய்யவும், கடந்து செல்லும் வெளித்தோற்றங்களிலிருந்து, ஆண்டவரின் மீது நம் கவனம் திரும்பவும் இத்திருவருகைக் காலத்தில், செபிப்போம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்து செல்லும் வெளித்தோற்றங்கள் மீது அல்லாமல், ஆண்டவர் என்ற பாறையின் மீது நமது வாழ்வு எழுப்பப்பட்டால், நாம் மகிழ்வாக வாழமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, மத்தேயு நற்செய்தியில் (மத். 7:21,24-27) கூறப்பட்டுள்ள அறிவாளி மற்றும் அறிவிலி ஆகியோரின் செயல்பாடுகளை மையப்படுத்தி தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆண்டவரும், அவரது வார்த்தைகளும் அடித்தளம்

ஆண்டவரையும், அவரது வார்த்தைகளையும் அடித்தளமாகக் கொண்டு வாழ்வை எழுப்புவோர் அறிவாளிகள் என்றும், கடந்து செல்லும் காட்சிகளை அடித்தளமாகக் கொண்டு வாழ்வை எழுப்புவோர் அறிவிலிகள் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

காற்றிலும், மழையிலும் அடித்துச் செல்லக்கூடிய மணல் மீது வீட்டைக் கட்டிவிட்டு, அதை அலங்காரம் செய்யும்வண்ணம் வெளிப்பூச்சுகளில் கவனம் செலுத்துவதால் பயனில்லை என்றும், பாறையைப்போல் விளங்கும் ஆண்டவரின் மீது வீட்டைக் கட்டுவதே மதியுள்ள செயல் என்றும் வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை.

வெளித்தோற்றங்களிலிருந்து, ஆண்டவரை நோக்கி...

அரண்மனை வாழ்வு என்ற வெளிப்பூச்சின் மீது அதிக கவனம் செலுத்தி வந்த புனித பிரான்சிஸ் போர்ஜியா அவர்கள், அரசி இசபெல்லாவின் இறந்த உடலுக்கு முன் பெற்ற ஞானம், அவரை, இறைவன் மீது தன் அடித்தளத்தை அமைக்க உதவியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

நம் வாழ்வின் அடித்தளம் என்ன என்பதை ஆய்வு செய்யவும், கடந்து செல்லும் வெளித்தோற்றங்களிலிருந்து, ஆண்டவரின் மீது நம் கவனம் திரும்பவும் இத்திருவருகைக் காலத்தில், செபிப்போம் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

மேலும், தன் மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "இன்று, உறுதியாக இருப்பதை, திருஅவை போற்றுகிறது. 'ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை!' (எசாயா 26:4). ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் எப்போதும் பாதுகாப்புடன் இருப்பர், ஏனெனில் அவர்களது அடித்தளம் பாறையின் மீது அமைந்துள்ளது" என்று சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2019, 14:29
அனைத்தையும் படிக்கவும் >