சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 051119 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 051119  (Vatican Media)

ஆண்டவரின் இலவச அழைப்பை புறக்கணிப்பது பாவமாகும்

ஆண்டவரின் அழைப்பை புறக்கணிப்பது, அழைத்த அவரை அவமதிப்பதன் அடையாளம். அவர், நல்லவர், தீயவர் என, எல்லா மக்களையும் அழைக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஆண்டவர், தம் விழாவுக்கு வருமாறு விடுக்கும் இலவச அழைப்பை எப்போதும் ஏற்பதற்கு, அவரின் அருளை மன்றாடுவோம் என்று, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நவம்பர் 05, இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மாபெரும் விழாக் கொண்டாட விரும்பிய ஒருவர், தான் அழைத்திருந்தவர்கள் பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி, அதனைப் புறக்கணித்ததால், அந்த மனிதர் தன் பணியாளரிடம், ஏழையர், உடல் ஊனமுற்றோர் ஆகியோரை கூட்டிவரச் சொல்லி, அவரின் விருந்தோம்பலில் அவர்கள் மகிழ்வது பற்றிய இத்திருப்பலியின் லூக்கா நற்செய்தி வாசகத்தை (லூக்.14,15-24) மையப்படுத்தி மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உவமை, மீட்பு வரலாற்றைத் தொகுத்துச் சொல்கின்றது மற்றும், பல கிறிஸ்தவர்களின் நடத்தை பற்றி விளக்குகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நமது வாழ்வு எப்படி அமைந்துள்ளது,  ஆண்டவர் விடுக்கும் அழைப்பை எப்போதும் ஏற்கிறேனா அல்லது, எனது சிறிய சிறிய காரியங்களில் என்னையே முடக்கிப்போட்டு விடுகிறேனா? என, நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்குமாறு ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார் என்று கூறினார். 

இலவச விருந்து

இந்த விருந்து, இந்த விழா, ஆண்டவரோடு என்றென்றும் வாழும் விண்ணகத்தைக் குறிக்கின்றது, இந்த விருந்தில் நாம் யாரைச் சந்திப்போம் என்பது, நமக்கு ஒருபோதும் தெரியாது, புதிய மனிதர்களையும் சந்திக்கலாம், நாம் பார்க்க விரும்பாதவர்களைக் காணலாம், ஆயினும், விழாச் சூழல், மகிழ்வும், ஆடம்பரமும் நிறைந்தது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆயினும், உண்மையான விழா, இலவசமாக வழங்கப்பட வேண்டியது என்று, தொடர்ந்து மறையுரையாற்றிய திருத்தந்தை, நம் கடவுள் நம்மை எப்போதும் இவ்வாறே அழைக்கிறார், அவர் நுழைவுக் கட்டணம் விதிப்பதில்லை, உண்மையான கொண்டாட்டங்களில், விருந்துக்கு அழைப்பவரே, கட்டணம் செலுத்துகிறார், ஆனால், இலவசமாக கொடுக்கப்படும் அழைப்பிற்குமுன், சிலர் தங்களின் சொந்த விருப்பங்களைத் தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.  

ஆண்டவர் எல்லாருக்காகவும் காத்திருக்கிறார் 

ஆண்டவரின் அழைப்பை புறக்கணிப்பது, நம்மை அழைத்தவரை அவமதிப்பதன் அடையாளம் என்றும், நல்லவர், தீயவர் என எல்லாரையும் அவர் அழைக்கிறார், வரவேண்டுமென கட்டாயப்படுத்தவும்கூடச் செய்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஒருவர் மோசமானவர் என்பதால், அவருக்காக, சிறப்பான வழியில் ஆண்டவர் காத்திருக்கிறார் என்றும், ஆண்டவர் அதிகம் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பு கூர்கிறார் என்றும், திருத்தந்தை கூறினார். எனவே அவரின் அழைப்பைப் புறக்கணியாதிருக்க வரம் வேண்டுவோம் என, மறையுரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

டுவிட்டர்

மேலும், இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, #SantaMarta என்ற ஹாஸ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். “ஆண்டவர் விடுக்கும் அழைப்பை எப்போதும் ஏற்கிறேனா அல்லது, எனது சிறிய சிறிய காரியங்களில் என்னையே முடக்கிப்போட்டு விடுகிறேனா? ஆண்டவர் தம் விழாவுக்கு இலவசமாக அழைக்கும் அழைப்பை எப்போதும் ஏற்பதற்கு அவரின் அருளை இறைஞ்சுவோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2019, 14:50
அனைத்தையும் படிக்கவும் >