தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 

பொறாமை நிறைந்த அலகை மனித சமுதாயத்தை அழிக்கின்றது

இறைமகனான இயேசு கிறிஸ்துவில் நம் விசுவாசத்தை அதிகரித்தருளும் என, ஆண்டவரிடம் மன்றாடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கடவுள் நம்மைப் போல் மனிதரானதால் அலகை மனிதரை அழிக்கின்றது என்று, நவம்பர் 12, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சாலமோன் ஞானம் நூலிலிருந்து வாசிக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (சா.ஞா.2,23-3,9) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதஉரு எடுத்த இயேசு மீது பொறாமை கொண்ட, மாபெரும் பொய்யனான அலகை, மனித சமுதாயத்தை அழிக்கின்றது என்று கூறினார்.

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார், தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார், ஆனால், அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது என்ற, இந்த முதல் வாசகத்தின் முதல் வரிகள் பற்றி, மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, அலகை இருக்கின்றான் மற்றும், மனிதரான இறைமகன்மீது கொண்ட பொறாமையால், உலகில் வெறுப்பை விதைக்கின்றான், அது மரணத்திற்குக் காரணமாகின்றது என்று கூறினார்.

கடவுள் மனித உருஎடுத்ததை விரும்பாத பொறாமைக்கார அலகை, மனித சமுதாயத்தை அழிக்கின்றது, அனைவரும், உடன்பிறந்தவர்களாக, அமைதியில் வாழ வேண்டிய நம்மில், அதனால் பொறாமை, ஆணவம், போட்டி போன்றவை இதயத்தில் நுழைந்தன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புறங்கூறல்

நான் யாரையும் அழிக்கவில்லை என நீங்கள் கூறலாம், ஆனால், அது உண்மையில்லை, புறங்கூறல் பற்றி என்ன சொல்வது, நீங்கள் யாரைப் பற்றியாவது மோசமாகப் பேசுகையில், அவர்களை அழிக்கின்றீர்கள் என்று கூறியத் திருத்தந்தை, நாவு, பயங்கரமான ஆயுதம் என்று திருத்தூதர் யாக்கோபு சொல்கிறார், புறங்கூறுதல் கொலை செய்கின்றது என்று எச்சரித்தார்.

பெர்லின் சுவர் நினைவு

பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்டதன் நினைவு நாள், போரின் கொடூரங்கள், நாத்சி கொள்கையாளர் மற்றும், தூய்மையான இனத்தைச் சேராத எவரையும் சித்ரவதைப்படுத்தியவர்களை மறையுரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இந்தக் கொடுமைகளை ஆற்றுவதற்கு ஒருவர் பின்புலத்தில் இருக்கின்றார், இதையே நாம் சோதனை என்று சொல்கிறோம் என்று கூறினார்.

அரசியலின் சகதி

கடவுள் நம்மைப் போல் ஒருவரானதை, அலகையால் தாங்கிக்கொள்ள இயலவில்லை, இதனாலே அவன் அழிக்கின்றான், இதுவே, அலகையின் பொறாமைக்கு, நம் தீமைகளுக்கு, நம் சோதனைகளுக்கு, இவ்வுலகில் போர்கள், பசி, அனைத்து துன்பங்களுக்கு ஆணிவேர் என்றுரைத்த திருத்தந்தை, அழிப்பதும், வெறுப்பை விதைப்பதும், அரசியலிலும்கூட சாதாரணமானதாக உள்ளன என்று கூறினார். இத்தகைய அரசியல்வாதிகள், எதிரிகளை வீழ்த்துவதற்கு அவமதிப்புச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர், இது நாட்டின் நன்மைக்கு ஏற்றதல்ல என்று கூறியத் திருத்தந்தை,

நம் உடலின் தீய சோதனைகளிலிருந்து வெற்றிபெற, கிறிஸ்து மனிதரானார் என்றும், இயேசு கிறிஸ்துவில் நம் விசுவாசம் வளரச் செபிப்போம் என்றும் கூறினார்.

டுவிட்டர் செய்தி

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 12, இச்செவ்வாயன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஸ்டாக்குடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இறைமகனான இயேசு கிறிஸ்துவில் நம் விசுவாசத்தை அதிகரித்தருளும் என, ஆண்டவரிடம் மன்றாடுவோம். இவர், நம் சதையோடு போராடி, நம் சதையில் வெற்றியடைவதற்காக, நம் மனித இயல்பை எடுத்து, மனிதரானார் என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

12 November 2019, 15:40
அனைத்தையும் படிக்கவும் >