தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 031019 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 031019  (ANSA)

இறைவார்த்தையைப் பெறுகையில் இதயம் மகிழ்வால் நிரம்புகின்றது

இறைவார்த்தை நம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றது, இறைவார்த்தையைச் சந்திப்பது நம்மை மகிழ்வால் நிரப்புகின்றது, இந்த மகிழ்வே நம் வலிமை - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

நமக்கு மகிழ்வூட்டும் இறைவார்த்தையைச் சந்திப்பதற்கு நம் இதயங்களைத் திறந்து வைப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், அக்டோபர் 3, இவ்வியாழன் காலையில் நிறைவேற்றிய திருப்பலியின் முதல் வாசகத்தை (நெகே.8:1-4a.5-6.7b-12) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தையை ஒரு காதில் கேட்டு மறுகாதில் விட்டுவிடாமல், அதற்கு கவனமுடன் செவிமடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

நெகேமியா நூலிலிருந்து வாசிக்கப்பட்ட இந்த முதல் வாசகம், இஸ்ராயேல் மக்கள், நாடுகடத்தப்பட்ட சூழலிலிருந்து திரும்பிவந்தது மற்றும், எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த சூழலைக் கொண்டுள்ளது. மக்களுக்குத் திருச்சட்டத்தைக் கற்பித்த, ஆளுனராகிய நெகேமியா, குருவும், திருநூல் வல்லுநருமான எஸ்ரா, லேவியர் ஆகியோர், இந்த நாள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள், இது ஆண்டவரின் புனித நாள், எனவே வருந்த வேண்டாம் என்று மக்களிடம் கூறினர்.

இந்தப் பகுதி, இறைவார்த்தை, இறைமக்களைச் சந்திப்பது பற்றிய கதையாக அமைந்துள்ளது மற்றும், இது மீள்கட்டமைப்பின் முழு வரலாற்றைக் கொண்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இஸ்ராயேல் மக்கள் திருநூலை வாசிக்கக் கேட்டபோது, உணர்ச்சி மிகுதியினால், மகிழ்வால் அழுதனர், அங்கே விழா நடந்தது என்று கூறினார்.

இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல்

நாம் இறைவார்த்தையைக் கேட்கும்போது, நம் இதயத்தில் என்ன நடக்கிறது? அதைக் கவனமுடன் கேட்கின்றோமா? அது நம் இயத்தைத் தொடுகின்றதா? அதைக் கேட்பதற்கு எப்படி நம் இதயத்தைத் தயார் செய்கிறோம்? என்ற கேள்விகளால் மனதை ஆய்வு செய்வோம் என மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தையின்றி, ஞாயிறு விழாவைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் கூறினார்.

நெகேமியா, எஸ்ரா மற்றும், லேவியர் கூறிய இறைவார்த்தையை இஸ்ராயேல் மக்கள் புரிந்துகொண்டதால், உண்ணவும், குடிக்கவும் செய்து,, எஞ்சியுள்ளதை ஏழைகளுக்கு அனுப்பினர், ஏழைகள் எப்போதும், கிறிஸ்தவ விழாவின் பீடச்சிறார் என்றும் உரைத்தார், திருத்தந்தை.

இறைவார்த்தை நம் வலிமை

இறைவார்த்தை நம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றது, இறைவார்த்தையைச் சந்திப்பது நம்மை மகிழ்வால் நிரப்புகின்றது, இந்த மகிழ்வே நம் வலிமை என்றும், ஆண்டவரின் மகிழ்வே, நமது வலிமை என்பதை நம்புவோம் என்றும் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தையைச் சந்திப்பதால் கிடைக்கும் மகிழ்வின் விழாவை, அஞ்சாமல் கொண்டாட ஆண்டவரின் அருளை மன்றாடுவோம் என மறையுரையை நிறைவு செய்தார்.

03 October 2019, 15:12
அனைத்தையும் படிக்கவும் >