சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலியின்போது சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலியின்போது  (Vatican Media)

நமக்குள்ளே நடப்பதை புரிந்துகொள்ள வரம் கேட்போம்

நாளின் இறுதியில் நமக்கென நேரம் ஒதுக்கி, நாம் எடுக்கும் தீர்மானங்கள் ஆண்டவரிடமிருந்து அல்லது சாத்தானிடமிருந்து வருகின்றனவா என, ஆன்ம பரிசோதனை செய்வோம் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் அனைவரிலும், அருளுக்கும், பாவத்திற்கும் இடையே போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றவேளை, கிறிஸ்தவர்களாகிய நாம், ஒவ்வொரு நாளின் இறுதியில் நமக்கென சிறிதுநேரம் ஒதுக்கி, நாம் எடுக்கும் தீர்மானங்கள் ஆண்டவரிடமிருந்து வருகின்றனவா அல்லது, சாத்தானால் தூண்டப்பட்டு வருகின்றனவா என சிந்திப்போம் என்று, இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 25, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், நன்மை செய்யும் விருப்பத்திற்கும், அதைச் செய்ய முடியாமல் இருப்பதற்கும் இடையே தொடர்ந்து நமக்குள்ளே நாம் போராடுவது குறித்து புனித பவுல் அடிகளார் உரோமையருக்கு எழுதிய திருமடலை மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தப் போராட்டத்தை புனிதர்களும், மறைசாட்சிகளும் எதிர்கொண்டனர் என்றும், இந்தப் போராட்டம் எனக்குக் கிடையாது, நான் அமைதியாக இருக்கிறேன் என்று யாரும் கூறினால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் அல்ல என்றும் கூறியத் திருத்தந்தை, நமக்குள்ளே நடப்பது என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒளிதருமாறு, ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று கூறினார்.

அன்றாட வாழ்வில், இந்தப் போராட்டங்களில் அசாதாரண மற்றும், சாதாரண தருணங்கள் உண்டு, அதனாலே இன்றைய நற்செய்தியில் இயேசு, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? என்று கேட்கிறார் என்றார் திருத்தந்தை. 

கிறிஸ்தவர்களாகிய நாம் பல நேரங்களில் நன்மையான காரியங்கள் ஆற்றுவதில்கூட சுறுசுறுப்பாய் இருக்கிறோம், ஆனால், அந்நேரங்களில் நமக்குள் எழுகின்ற உணர்வுகள் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறோமா என்று கூறியத் திருத்தந்தை, நாம் தெருவில் செல்கையில், பொதுவாக, நமக்கு விருப்பமான பொருள்களையே நோக்குகிறோம், அடுத்தவரை நோக்குவதில்லை என்றும் கூறினார்.

கடவுளின் அருளுக்கும் பாவத்திற்கும் இடையே எப்போதும் நமக்குள் போராட்டம் நடக்கின்றது, ஆயினும் நமக்குள் என்ன நடக்கின்றது என்பதை ஆய்வு செய்யாமல் செல்லும் கிறிஸ்தவர்களா நாம்? என்று நம்மையே கேள்வி கேட்க வேண்டுமென ஆண்டவர் விரும்புகிறார் என்றும், திருத்தந்தை கூறினார். 

ஒவ்வொரு நாளின் இறுதியில், இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஒதுக்கி, அன்றைய நாளில் என்ன நடந்தது என்பதை ஆன்ம பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

டுவிட்டர்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று #SantaMarta என்ற ‘ஹாஷ்டாக்’குடன் பதிவு செய்துள்ள டுவிட்டர் செய்தியில், நமக்குள் என்ன நடக்கின்றது என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்வதற்கு நம்மில் ஒளியூட்டுமாறு ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2019, 10:31
அனைத்தையும் படிக்கவும் >