தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 151019 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 151019  (Vatican Media)

தன்னை நோக்கி விரலைச் சுட்டிக்காட்ட கற்றுக்கொள்ள..

ஒருவர், தான் செய்த தவறுகளை ஏற்பது, வெளிவேடத்திலிருந்து வெளிவருவதற்கு ஏற்ற மருந்தாகும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஒருவர் தன்னை கடவுளின் முன்பாக, குற்றம் சுமத்த அறிந்திருப்பதே, வெளிவேடத்தன்மையிலிருந்து குணமடைவதற்கு மருந்தாகும், இவ்வாறு கடவுளின் முன்னர் எவ்வாறு தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறியாதவர், நல்ல கிறிஸ்தவர் அல்ல என்று, இச்செவ்வாய் காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 15, இச்செவ்வாய் காலையில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை உணவருந்த அழைத்திருந்த பரிசேயர் குறைகூறியதற்கு இயேசு அளித்த பதில் பற்றி விளக்கும் இந்நாளைய நற்செய்தியை (லூக்.11,37-41) மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

உணவு அருந்துமுன்பு, யூத முறைப்படி இயேசு கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்ததை உணர்ந்த இயேசு கூறிய பதிலைக் குறிப்பிட்டு மறையுரையாற்றிய திருத்தந்தை, இத்தகைய வெளிவேடத்தன்மையை இயேசு சகித்துக்கொள்வதே இல்லை என்று கூறினார்.

பரிசேயர் இயேசுவை உணவருந்த அழைத்தார், அப்போது அவரோடு நட்புறவு ஏற்படுத்துவதை விடுத்து, அவர் பற்றி தீர்ப்பிட்டார், இதுவே இக்காலத்திலும் நடக்கின்றது, வெளிவேடம் என்பது, வெளித்தோற்றத்தில் ஒருமாதிரியாகவும், அகத்தில் வேறு மாதிரியாகவும் இருப்பது, இந்த தன்மை, பொய்யனாகிய சாத்தானிடமிருந்து பிறப்பதாகும் என்று திருத்தந்தை கூறினார்.

வெளிவேடத்தன்மையை சகித்துக்கொள்ளாத இயேசு, பரிசேயர்களை வெளிவேடக்காரர்கள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று அடிக்கடி அழைத்தார், அந்த வெளிவேடப் போக்கு இயேசுவை அல்ல, மாறாக, உண்மையை அவமதிப்பதாகும் எனவும் திருத்தந்தை கூறினார்.  

வெளிவேடம், சாத்தானின் மொழி, நம் இதயங்களில் நுழையும் தீமையின் மொழி அது மற்றும், அது, சாத்தானால் விதைக்கப்படுகின்றது, வெளிவேடம் போடும் மக்களுடன் யாராலும் வாழ இயலாது, ஆயினும் சிலர் இருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, வெளிவேடம், கொலை செய்கின்ற நச்சுத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தார்.

ஒருவர் தான் செய்த தவறுகளை ஏற்பது, வெளிவேடத்திலிருந்து வெளி வருவதற்கு மருந்தாகும் என்றுரைத்த திருத்தந்தை, வெளிவேடத்திலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு கடவுளிடம் மன்றாடுவோம் என்று, மறையுரையில் விசுவாசிகளிடம் கூறினார்.

டுவிட்டர்

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன் டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “வெளிவேடத்தன்மையை நாம் எவ்வாறு களைந்தெறிய வேண்டும்? அதற்கு உதவுவதற்கு ஒரு  நல்ல மருந்து உள்ளது. விரலை நம்மை நோக்கி சுட்டிக்காட்ட வேண்டும் மற்றும், ஆண்டவரிடம் தாழ்ச்சியுடன், ஆண்டவரே, நான் இருப்பது போலவே என்னை நோக்கும் என்று கூற வேண்டும்” என்ற சொற்களை பதிவுசெய்துள்ளார்.

15 October 2019, 14:55
அனைத்தையும் படிக்கவும் >