சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி  (Vatican Media)

கருத்தியல், விசுவாசத்திற்கு மாற்றாக அமையக் கூடாது

தனது கருத்தியல்களில் வேரூன்றியிருப்பவர், எந்த காழ்ப்புணர்வுமின்றி எல்லாச் சூழல்களையும் அணுகும் கடவுள், இவ்விருவரையும் யோனாவின் வரலாறு குறித்துக் காட்டுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

தீர்ப்பிட அல்ல, மாறாக, மீட்பளிப்பதற்காக இவ்வுலகிற்கு வந்த ஆண்டவர், அனைத்து மனிதச் சூழல்களையும் இரக்கத்தோடு அணுகுகிறார் என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், அக்டோபர் 08, இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவாக்கினர் யோனா

இத்திங்கள் திருப்பலியில் வாசிக்கப்பட்ட இறைவாக்கினர் யோனாவின் வரலாறு, இச்செவ்வாயும் தொடர்கின்றது, இப்புதனன்று நிறைவடைகின்றது, இப்புதனன்று திருப்பலியில் வாசிக்கப்படும் முதல் வாசகத்தில், கடவுளுக்கும்  யோனாவுக்கும் இடையே நிலவும் கடும் வாக்குவாத உறவு விவரிக்கப்பட்டுள்ளது என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இறைவாக்கினர் யோனா பற்றி மேலும் விளக்கினார்.

யோனாவை நினிவே நகர் சென்று அம்மக்களை மனந்திரும்புமாறு அழைப்பு விடுக்கச் சொல்கிறார், அப்பணி மிகவும் கடினம் என யோனா மறுக்கிறார், பின் தர்சீசுக்குத் தப்பிச் செல்கிறார், ஆனால் கடலில் ஏற்பட்ட புயலில் அவர் திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டு மூன்று பகல், மூன்று இரவுகள் கடந்து, அது கரையில் அவரை எறிகிறது என்று யோனா பற்றி விளக்கினார் திருத்தந்தை. 

இச்செவ்வாயன்று வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில், கடவுளின் வாக்கு மீண்டும் யோனாவுக்கு அருளப்பட்டது பற்றியும், அவர் நினிவே சென்று போதித்தது, பின்னர் அம்மக்கள் பாவத்திற்குப் பரிகாரமாகத் தவம் செய்தது, ஆண்டவரும், அந்நகர் மீது அனுப்பவிருந்த தண்டனையை நிறுத்திக்கொண்டது பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டவர் நினிவே மீது தண்டனை அனுப்பவில்லை என்பதற்காக, யோனா கடுஞ்சினமுற்று முறையிடுகிறார், சினங்கொள்கிறார், அப்போது ஆண்டவர் ஆமணக்குச் செடியை வைத்து யோனாவுக்குப் பாடம் சொல்கிறார் என்று இறைவாக்கினர் யோனா பற்றி விளக்கினார் திருத்தந்தை.

இரக்கத்தில் பிடிவாதம்

இங்கு கடவுளுக்கும்  யோனாவுக்கும் இடையே நிலவும் கடும் வாக்குவாதம், இரு தலைக்கனங்களுக்கு இடையே நடைபெறுவதாகும், யோனா, தன் நம்பிக்கை உறுதிப்பாடுகளில் பிடிவாதமாக இருக்கிறார், ஆனால், ஆண்டவரோ தம் இரக்கத்தில் பிடிவாதமாக இருக்கிறார், ஆண்டவர் நம்மைவிட்டு விலகுவதில்லை, இறுதிவரை நம் இதயக் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கின்றார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யோனா பிடிவாதமாக இருந்தார், ஏனெனில் அவர் தனது விசுவாசத்தின் மீது நிபந்தனைகளை வைக்கிறார், இவர், நிபந்தனைகள் வைக்கும் கிறிஸ்தவர்களைக் குறித்து நிற்கிறார், இத்தகைய கிறிஸ்தவர்கள், கடவுளுக்கு நிபந்தனை விதிப்பவர்கள் என்று திருத்தந்தை கூறினார். நிபந்தனைகள், பல கிறிஸ்தவர்களை தங்களின் சொந்த கருத்தியல்களிலே முடக்கி வைத்துள்ளன, இவர்கள் வாழ்வின் மற்றும், ஆண்டவரின் சவால்களுக்கு அஞ்சுபவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

இவர்கள் தங்களின் சிறுமை இதயத்திலிருந்து எல்லாவற்றையும் தீர்ப்பிடுகிறவர்கள், கடவுளின் கரங்களில் தங்களை வைப்பதற்கு அஞ்சுகின்றவர்கள் எனவும் திருத்தந்தை கூறினார்.

டுவிட்டர்

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன் டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, “யோனா, தனது நம்பிக்கை உறுதிப்பாடுகளில் பிடிவாதமாக இருக்கிறார், மற்றும், ஆண்டவர் தம் இரக்கத்தில் பிடிவாதமாக இருக்கிறார், ஏனெனில், ஆண்டவர் எப்போதும், தீர்ப்பிட அல்ல, மாறாக, குணமாக்கவும், மீட்கவும் விரும்புகிறார்” என்று எழுதியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2019, 16:23
அனைத்தையும் படிக்கவும் >