தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி   (Vatican Media)

கிறிஸ்தவ நம்பிக்கை, மூச்சுவிடும் காற்று போன்றது

நம்பிக்கை என்பது, ஆண்டவரைச் சந்திப்போம் என்ற எதிர்நோக்கில் வாழ்வதாகும். கையில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, அடுத்த கரையில் நங்கூரத்தை போடுவது போலாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம்பிக்கை மனிதர்களாக வாழ்வதற்கு, நாம் எதன் மீதும் பற்று வைத்திருக்கக் கூடாது மாறாக, ஆண்டவரைச் சந்திப்பதை நோக்கி மிகவும் பதட்டத்தில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், அக்டோபர் 29, இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், கிறிஸ்தவ நம்பிக்கையை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரைச் சந்திப்பதில் எப்பொழுதும் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாய் வாழாவிடில், கிறிஸ்தவர்களின்  வாழ்வு தேக்க நிலையாக மாறும் என்று கூறினார்.  

புனித பவுல் அடிகளார், உரோமையருக்கு எழுதிய மடலில் நம்பிக்கை பற்றிக் கூறும் இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (உரோம. 8:18-25) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, நம்பிக்கை என்பது, அடுத்த கரையில் ஒரு நங்கூரத்தை போடுவதுபோல் ஆகும் என்று கூறினார்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது, இவ்வுலகில் ஒரு கூடாரத்தை அமைக்க இயலாது என்பதை எப்போதும் அறிந்தவர்களாய், ஆண்டவரைச் சந்திப்பதிலே துடிப்புள்ளவர்களாய் வாழ்வதாகும் என்றுரைத்த திருத்தந்தை, தண்ணீர் ஓடாமல் இருந்தால், அது தேங்கியே இருக்கும், அதேபோல், கிறிஸ்தவ வாழ்வும் பரந்து விரியும் சக்தியைக் கொண்டிராவிடில், தேக்கநிலையை அடையும் மற்றும், அத்தகைய கிறிஸ்தவ வாழ்வு, மெய்யியல் கோட்பாடாக மாறும் என்று எச்சரித்தார்.

நாம் நம்பிக்கை மனிதர்களாக வாழ விரும்பினால், எதிலும் பற்று இல்லாத ஏழைகளாக திறந்தமனம் உள்ளவர்களாக வாழ வேண்டும், நம்பிக்கை என்பது தாழ்ச்சி என்ற புண்ணியமாகும், ஒவ்வொரு நாளும் இந்த நம்பிக்கையிலே நாம் வேலை செய்கிறோம், ஒவ்வொரு நாளும், கயிற்றை நம் கையில் பிடித்துக்கொண்டு, நங்கூரத்தை வைக்க வேண்டும், சிறிய செயல்களில்கூட நம்மில் தூய ஆவியார் வேலை செய்கிறார் என்ற பாதுகாப்பு உணர்வு நம்மில் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

நம்பிக்கையில் வாழ்வதற்கு, இந்நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்.13,18-21) இயேசு சொல்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, இறையாட்சி, தம் தோட்டத்தில் இடும் கடுகு விதைக்கு ஒப்பாகும், அது வளர்வது வரை காத்திருக்க வேண்டும், அது எவ்வாறு வளர்கின்றது என்பதை ஒவ்வொரு நாளும் நாம் சென்று பார்ப்பதில்லை, அதற்கு பொறுமை அவசியம் என்று கூறினார்.

நம்பிக்கைக்கும் பொறுமை அவசியம் என்று கூறியத் திருத்தந்தை, நம்பிக்கை பாதுகாப்பைத் தருகின்றது, அது ஒருபோதும் ஏமாற்றாது என்றும், நம் ஆண்டவர் அளித்துள்ள வாக்குறுதிகளுக்குத் திறந்த மனதுள்ளவர்களாய் இருப்பதற்கு அவரிடம் மன்றாடுவோம் என்றும், திருத்தந்தை கூறினார்.  

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை என்பது, ஆண்டவரைச் சந்திப்போம் என்ற எதிர்நோக்கில் வாழ்வதாகும். கையில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, அடுத்த கரையில் நங்கூரத்தை எறிவது போலாகும் என்ற வார்த்தைகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2019, 15:06
அனைத்தையும் படிக்கவும் >