சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 200919 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 200919  (Vatican Media)

திருத்தந்தை - உங்களின் பங்குத்தந்தையர்க்காகச் செபிக்கின்றீர்களா?

குருத்துவம் என்ற அருள்கொடையைப் பெற்றுள்ள அனைவரும், தங்களுக்கிடையே நெருக்கமாக இருக்க வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அருள்பணியாளர்களும் ஆயர்களும், தாங்கள் பெற்றுள்ள குருத்துவம் எனும் அருள்கொடையை ஒருபோதும் மறவாதிருப்பதற்கு, அவர்களுக்காகச் செபிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அருள்கொடையை பெற்றுள்ளவர்கள், தங்களுக்கிடையே நெருக்கமாக இருக்க வேண்டும் என்று, இவ்வெள்ளியன்று கூறினார்.

ஆயர்கள் செபத்தில் கடவுளுடன், மற்றும், தங்களின் அருள்பணியாளர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும், அருள்பணியாளர்கள், ஒருவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும், இறுதியாக, இறைமக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் ஆகியவை, அவர்கள் பின்பற்றவேண்டிய நான்கு வழிகள் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 20, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நான்கு வழிகளை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

புனித பவுலடிகளார், இளைஞரான ஆயர் திமொத்தேயுவுக்கு அறிவுரை வழங்கி எழுதிய முதல் மடலிலிருந்து (1திமொ.6,2-12; 4:12-16), எடுக்கப்பட்ட இந்நாளைய மற்றும், நேற்றைய முதல் வாசகங்களை மையப்படுத்தி, இவ்வாறு மறையுரையாற்றினார்.

அருள்பணியாளர்களும், ஆயர்களும் திருப்பணிக் குருத்துவத்தை, ஓர் அருள்கொடையாகப் பெற்றதை மறக்க வேண்டாமென, இவ்வியாழன் மறையுரையில்  வலியுறுத்திய திருத்தந்தை, இவ்வெள்ளியன்று பணப்பற்று, அறிவற்ற விவாதங்கள் மற்றும், பயனற்ற வீண்பேச்சுக்கள் பற்றிக் குறிப்பிட்டார். இவை திருப்பணி குருத்துவ வாழ்வை பலவீனமடையச் செய்யும் எனவும், திருத்தந்தை எச்சரித்தார்..

அருள்பணியாளர், திருத்தொண்டர், மற்றும் ஆயர் ஆகியோர், பணத்தில் பற்றுவைக்கத் துவங்கும்போது, அவர்கள் தங்களை அனைத்துத் தீமைகளின் ஆணிவேரோடு பிணைத்துக் கொள்கின்றனர் என்று எச்சரித்த திருத்தந்தை, செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறவர்கள், சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள், பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் என்ற பவுலடிகளாரின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.

சாத்தான், பணப்பை வழியாக நுழைகிறான் என, தன் காலத்து வயதான பெண்கள் சொல்வார்கள் என்றுரைத்த திருத்தந்தை, ஆயரின் முதல் கடமை, செபிப்பதாகும் என்றார்.

ஆயர்களுக்கு மிக நெருக்கமான அயலவர்களாக இருப்பவர்கள், அருள்பணியாளர்களும், திருத்தொண்டர்களும் என்பதால் அவர்களுடன் மிக நெருக்கமாக இருக்க வேண்டும், என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஆயர், தன் அருள்பணியாளர்களை மறப்பது மிகவும் வருந்தத்தக்கது என்றும் கூறினார்.

கருத்தியல்களின் அடிப்படையால் பிரியும் சிறிய குழுக்கள் பற்றியும் எச்சரித்த திருத்தந்தை, அருள்பணியாளர்கள் தங்களுக்குள்ளும், இறைமக்களுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இறுதியாக, திருப்பலியில் பங்கெடுத்த விசுவாசிகளிடம், நீங்கள் உங்கள் பங்குத்தந்தையர்க்காக, உதவிப் பங்குத்தந்தையர்க்காகச் செபிக்கின்றீர்களா அல்லது அவர்களைப் பற்றி குறை கூறுகின்றீர்களா என்ற கேள்வியை எழுப்பி,  அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2019, 15:16
அனைத்தையும் படிக்கவும் >