தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருத்தந்தை - இளையோர், வயதானவர் பராமரிக்கப்பட வேண்டும்

வாழ்வை மதித்து, பராமரித்து அன்புகூர்வது, நம் குழுமங்களில் கடவுளின் பிரசன்னம் உள்ளது என்பதன் அடையாளம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இளையோரையும், வயதானவர்களையும் பராமரிப்பதன் வழியாக, நம்பிக்கை கலாச்சாரத்தை ஊக்குவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று அழைப்பு விடுத்தார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், செப்டம்பர் 30, இத்திங்கள் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களிலும், சமுதாயங்களிலும், இளையோரும், வயது முதிர்ந்தோரும் கவனிக்கப்படுமாறு வலியுறுத்தினார்.

இளையோரும், வயது முதிர்ந்தோரும் எதையும் ஆக்குவதில்லை என அவர்களைப் புறக்கணிப்பது, கடவுளின் பிரசன்னம் இருப்பதன் அடையாளமாக இல்லை என உரைத்த திருத்தந்தை, கடவுள் தம் மக்கள் மீது காட்டும் அன்பு, எரியும் சுடர் போன்றது என்று கூறினார்.

கடவுள், தம் மக்கள், தம்மை மறுதலித்தாலும், மறந்துபோனாலும், அவரின் அன்பு, நம் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது, மீட்பளிப்பதாக அவர் அளித்த வாக்குறுதியும் தொடர்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

இத்திருப்பலியின் முதல் வாசகமான, இறைவாக்கினர் செக்கரியா நூல் பகுதியை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்றேன்; சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன் என்று ஆண்டவர் கூறிய வார்த்தைகள், அவரின் அன்பு பற்றி இன்று நமக்குச் சொல்கின்றன என்று உரைத்தார்.  

வாழ்வை மதித்து, பராமரித்து அன்புகூர்வது, நம் குழுமங்களில் கடவுளின் பிரசன்னம் உள்ளது என்பதன் அடையாளம், வயதானவர்களின் இருப்பு, பக்குவத்தின் அடையாளம், என்றும், மறையுரையில் கூறியத் திருத்தந்தை, வீணாக்கும், புறக்கணிக்கும் கலாச்சாரம் பற்றியும் பேசினார்.

திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்கையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்குமாறு கொண்டுவருவது பார்த்து மிகவும் உள்ளம் நெகிழ்ந்தேன், அதேநேரம், அச்சிறாரின் உண்மையான சொத்து யார் எனவும் தான் காட்டியதாகத் தெரிவித்து மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டுவிட்டர் செய்தி

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், செப்டம்பர் 30, இத்திங்கள் காலையில் நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இளையோரும் வயது முதிர்ந்தோரும் ஒன்றிணைகின்றனர். இது, மக்கள், வாழ்வை வளப்படுத்துகின்றனர் என்பதன் அடையாளம். இளையோரையும், வயதானவர்களையும் பராமரிக்கும்போது, அங்கே நம்பிக்கை கலாச்சாரம் உள்ளது” என்ற சொற்கள் திருத்தந்தையிள் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

30 September 2019, 15:38
அனைத்தையும் படிக்கவும் >