தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 260919 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி 260919  (Vatican Media)

அரைகுறை விசுவாசம், வாழ்வை கல்லறைக்குள் விட்டுவிடும்

ஆன்மீகத்தில் அரைகுறை ஆர்வமுள்ளவர்களாய் மாறும்போது, சாரமில்லாத அரைவேக்காடு கிறிஸ்தவர்களாக மாறுகிறோம், மாறாக, ஆண்டவர் இன்று, மனமாற்றத்தை விரும்புகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

எந்தப் பலனும் தராத போலியான மன அமைதியோடு திருப்தியடைய வேண்டாமென, செப்டம்பர் 26, இவ்வியாழனன்று, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கலந்துகொண்ட விசுவாசிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசிக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகம் பற்றிய சிந்தனைகளை, மறையுரையில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வேலைசெய்வதற்காக, தம் மக்கள் தங்களின் நடத்தைகள் பற்றி சிந்தித்து, அவற்றை மாற்றிக்கொள்வதற்கு, ஆண்டவர், எவ்வாறு அழைப்பு விடுக்கிறார் என்பது பற்றி கூறினார்.

காலந்தாழ்த்தும் மனமாற்றம்

இறைவாக்கினர் ஆகாய், தோல்வி வாழ்வுக்குத் தங்களை உட்படுத்தி சோம்பலாக வாழ்ந்த  மக்களை மீண்டும் செயல்பட வைப்பதற்கு முயற்சித்தார், பகைவர்களால் அழிக்கப்பட்ட ஆலயம் முழுவதும் சிதைந்து கிடந்தது, ஆயினும், அம்மக்கள், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தனர் என்றுரைத்த திருத்தந்தை, அச்சமயத்தில், ஆண்டவர் இறைவாக்கினரை அனுப்பினார் என்று கூறினார்.

ஆயினும், மக்களின் மனம் நொந்துபோய், சவால்கள் எடுத்து, ஆலயக் கட்டுமானப் பணியில் ஈடுபட விருப்பமின்றி இருந்தனர், இம்மக்கள், மீண்டும் துவங்குவதற்கு தங்களைத் தூண்டிவிடவும் விருப்பமில்லாமல் இருந்தனர், ஆண்டவர் உதவி செய்யவும் அவர்கள் அனுமதிக்கவில்லை, இன்னும் காலம் வரவில்லை என சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டிருந்தனர், இதுவே, பல அரைகுறை கிறிஸ்தவர்களின்  நிலையும் என்று கூறினார் திருத்தந்தை.

ஆம் ஆண்டவரே, ஆம் ஆண்டவரே, என்று சொல்லும் அரைகுறை கிறிஸ்தவர்கள், நாளைக்குச் செய்கிறேன் என்று நாள்களைத் தள்ளிப்போட்டு, மெல்ல மெல்ல ஆண்டவரிடமிருந்து விலகுவார்கள், இத்தகைய ஆன்மீகம், அமைதியாக இருக்கும் கல்லறைதோட்டத்திற்கு இட்டுச் செல்கின்றது என்று மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அரைகுறை விசுவாசம்

அரைகுறை விசுவாசம், நிச்சயமற்ற தன்மையில் பல சாக்குப்போக்குகளைத் தேடும், மற்றும், எதையும் செய்வதற்கு காலத்தைத் தள்ளி வைக்கும் மனநிலைக்கு உரமிடும் என்றுரைத்த திருத்தந்தை, இந்நிலை, பலர் தங்கள் வாழ்வை வீணாக்குவதற்கும், ஒழுங்கற்ற நிலைக்கும் இட்டுச்செல்லும் என்றார்.

இவர்கள், தங்களுக்குள்ளே அமைதியான உணர்வுகளை வளர்த்துக்கொள்வார்கள், அந்த அமைதி கல்லறைத் தோட்டத்தின் அமைதியாகும், நாம் ஆன்மீகத்தில் அரைகுறையாய் இருக்கையில், அரைகுறை கிறிஸ்தவர்களாக மாறுகிறோம், ஆனால் ஆண்டவர் இன்று மனமாற்றத்தை விரும்புகிறார் என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அரைகுறை கிறிஸ்தவர்களாக வாழும் நிலையில் உட்படாமல் இருப்பதற்கு ஆண்டவரிடம் இத்திருப்பலியில் மன்றாடுவோம் என்றும், விசுவாசிகளிடம்  கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டுவிட்டர் செய்தி

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஆன்மீகத்தில் அரைகுறை ஆர்வமுள்ளவர்களாய் மாறும்போது, சாரமில்லாத அரைவேக்காடு கிறிஸ்தவர்களாக மாறுகிறோம், மாறாக, ஆண்டவர் இன்று, மனமாற்றத்தை விரும்புகிறார்” என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார்.

26 September 2019, 15:26
அனைத்தையும் படிக்கவும் >