தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி  (ANSA)

திருப்பணி ஓர் அருள்கொடை, அது பற்றி தியானிக்க வேண்டும்

‘நீ பெற்றுள்ள அருள்கொடையை குறித்து அக்கறையற்றவனாய் இராதே’ என, புனித பவுலடிகளார், திமொத்தேயுவிடம் கூறியுள்ளது குறித்து, அருள்பணியாளர்கள் எல்லாரும், தங்களின் இறைப்பணியில் சிந்திக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

திருப்பணிக் குருத்துவம், ஒரு கொடை, அது போற்றப்பட்டு பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 19, இவ்வியாழன் காலையில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

திருப்பணிக் குருத்துவம் பற்றி இன்றைய திருப்பலியில் தியானித்த திருத்தந்தை, திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்கள் அனைவரும், மற்றவருக்கு தொண்டுபுரிய வேண்டும் என்பதற்காக, இயேசு, இந்தக் கொடையை அவர்களுக்கு அருளுகிறார் என்று கூறினார்.

இவ்வியாழன் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், பங்குகொண்ட, குருத்துவ வெள்ளி விழாவைச் சிறப்பித்த அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்கள் பலரிடம் இவ்வாறு கூறினார், திருத்தந்தை.

புனித பவுலடிகளார் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலிலிருந்து (1திமொ.4:12-16), எடுக்கப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பணிக் குருத்துவத்தில் பெற்ற அருள்கொடையைப் புறக்கணிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டார்.

திருப்பணிக் குருத்துவம், நான் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற வேலை ஒப்பந்தம் அல்ல, வேலை செய்ய வேண்டும் என்பது இரண்டாவது இடம்தான், ஆனால், இந்த அருள்கொடையை நான் பெற்று, அதை அக்கறையுடன் பராமரிக்க வேண்டும் என்று தியானிப்பதே முதலாவது செய்ய வேண்டியது, அவ்வாறு செய்கையில், மற்றவையனைத்தும் அதிலிருந்தே பொங்கி வருகின்றது என்று திருத்தந்தை தெரிவித்தார்.

நாம் இந்த அருள்கொடையின் தகுதியை மறந்தால், அது ஒரு செயல்பாடாக மாறிவிடும், அப்போது திருப்பணியின் முக்கியத்துவத்தையும், நம்மை நோக்கி ‘என்னைப் பின்செல்’ என்ற இயேசுவின் உற்றுநோக்குதலையும் இழந்துவிடுவோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இன்றைய நற்செய்தியில் வருகின்ற பரிசேயர் செய்ததுபோல் (லூக்.7:36-50), அதாவது அவர் இயேசுவுக்கு தனது வீட்டில் விருந்தளித்தபோது, உபசரிப்பின் பல விதிமுறைகளை அவர் மறந்தது போல, திருப்பணி குருத்துவத்தில் பெற்ற அருள்கொடையின் கூறை மறப்பது மனித இயல்பு என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

திருஅவையில், திருப்பொழிவு பெற்றுள்ள அனைத்து திருப்பணியாளர்களும், குறிப்பாக, 25ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பவர்களும், இந்த அருள்கொடையை அக்கறையுடன் பாரமரிப்பதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, திருப்பணி குருத்துவத்தை ஓர் அருள்கொடையாக நோக்கவும், அந்நோக்கத்தின்படி பணியாற்றவும் வேண்டுமென செபிப்போம் என்று திருத்தந்தை கூறினார். இதன் வழியாக, அவர்கள், தொழில்முனைவோர் அல்லது நற்பணியாற்றுவோர் என மாறுவதைத் தவிர்க்க இயலும் எனவும் கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2019, 15:08
அனைத்தையும் படிக்கவும் >