தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி  (Vatican Media)

திருத்தந்தை – பிறருக்கு இலவசமாகப் பணியாற்றுங்கள்

கடவுளோடு நமக்குள்ள உறவு, முற்றிலும் இலவசமானது. எனவே, அவரின் அருளைப் பெறுவதற்கு, நம் இதயங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுள் உங்களை இலவசமாக அன்புகூர்வது போன்று, நீங்களும் பிறருக்கு இலவசமாகப் பணியாற்றுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் மறையுரையாற்றினார்.

திருத்தூதர் புனித பர்னபாவின் திருவிழாவாகிய, ஜூன் 11, இச்செவ்வாய் காலையில், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இயேசு திருத்தூதர்களை மறைப்பணியாற்ற அனுப்பியது பற்றிய மத்தேயு நற்செய்திப் பகுதியை (மத்.10,7-13) மையப்படுத்தி ஆற்றிய மறையுரையில், இவ்வாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளோடு நமக்குள்ள உறவு, முற்றிலும் இலவசமானது, எனவே, அவரின் அருளைப் பெறுவதற்கு, நம் இதயங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள், நம்மை அன்புகூர்வது போன்று, நாமும் நம் சகோதரர், சகோதரிகளுக்குப் பணிவிடைபுரியவும், அவர்களை அன்புகூரவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்

“விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றுங்கள், நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள் என்ற மறைப்பணியை, இயேசு நம்மிடம் ஏற்கனவே கொடுத்துள்ளார் என்றும், திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது, பணியாற்றுவதே என்றும், கிறிஸ்தவத்திற்கு மனம் மாறியவர்கள், துவக்கத்தில் இறைமக்களுக்குப் பணியாற்றுவதற்குத் திறந்தமனதுள்ளவர்களாய் இருந்து, நாளடைவில், இறைமக்களைப் பயன்படுத்தத் துவங்கிவிடும் நிலை வருத்தமளிக்கின்றது எனவும், திருத்தந்தை கூறினார்.

இலவசமாகக் கொடுங்கள்

கிறிஸ்தவ வாழ்வு, இலவசமாக வாழப்படுகின்றது, எந்த விலையுமின்றி அது பெற்றுக்கொள்ளப்படுகின்றது, எனவே, எந்த விலையுமின்றி அதைப் பிறருக்கு அளிக்க வேண்டுமென்றும், மீட்பை விலைகொடுத்து வாங்க இயலாது, ஏனெனில், கடவுள் நம்மை இலவசமாக மீட்டார், அதற்கு எந்த விலையுமில்லை எனவும், திருத்தந்தை கூறினார்.

கடவுளின் கொடைகள் எல்லாம் விலையின்றி நமக்குக் கொடுக்கப்படுகின்றன, ஆனால் அதைப் பெற இயலாமல், பலவேளைகளில், நம் இதயங்களை மூடி வைத்துக்கொள்கிறோம் எனவும் உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், குறிப்பாக, மேய்ப்பர்களும் ஆயர்களும், கடவுளின் அருள்வரங்களை விற்பதற்கு முயற்சிக்கக் கூடாது, மாறாக, அவற்றை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.    

டுவிட்டர் செய்தி

மேலும், ஜூன் 11, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அனைவரின் இதயங்களையும் கடவுளின் அருள்வரங்கள் சென்றடையும்பொருட்டு, கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” என்று எழுதியுள்ளார்.

11 June 2019, 15:01
அனைத்தையும் படிக்கவும் >