சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 210519 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 210519  (ANSA)

இயேசு வழங்கும் அமைதி, ஆழ்கடல் அமைதி போன்றது

உலகிலிருந்து கிடைக்கும் போலியான அமைதி அல்லது வங்கியில் பணத்தை வைத்திருப்பதால் கிடைக்கும் அமைதியை விரும்பாமல், இயேசுவால் உறுதிகூறப்பட்ட அமைதியில் வாழ கடவுளை மன்றாடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு வழங்கும் அமைதியை உலகால் தர இயலாது, மாறாக, அது, தூய ஆவியாரிடமிருந்து வருவது, அந்த அமைதி, வாழ்வில் சோதனைவேளைகளில் நிலைத்திருந்து, புன்னகையோடு முன்னோக்கிச் செல்வதற்கு, நம் இதயங்களில் துணிச்சலையும் தருகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.

மே 21, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தம் சீடர்களோடு இறுதி இரவுணவை உண்டவேளையில், தம் சீடர்களுக்கு உறுதி வழங்கிய அமைதி எனும் கொடை பற்றி மறையுரையாற்றினார்.

இத்திருப்பலியின் முதல் வாசகத்தில் கேட்ட, புனித பவுலடிகளார் அனுபவித்த சோதனைகள் மற்றும் சிதர்வதைத் துன்பங்களோடு, இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா.14,27-31b) நாம் கேட்ட, அமைதியை உங்களுக்கு விட்டுச்செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் என, இயேசு உறுதியளித்த அமைதியை, எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நீங்கள் துன்புறுத்தப்படும்போது பேறுபெற்றவர்கள்

வாழ்வின் சோதனைகளும், துன்பங்களும் அமைதியில்லாத வாழ்வாகத் தோன்றலாம் என்றுரைத்த திருத்தந்தை, “என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! (மத்.5,11)” என்ற இயேசுவின் திருச்சொற்களையும் நினைவுபடுத்தினார்.

இயேசு தரும் அமைதி, சோதனை, துன்ப வாழ்வோடு ஒன்றிணைந்து செல்கிறது, அந்த அமைதி, இவை அனைத்தையும்விட, மிக மிக ஆழமானது, அந்த அமைதியை யாராலும் தொட முடியாது, அது ஒரு கொடை, ஆழ்கடலில் நிலவும் அமைதி போன்றது அது  என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இயேசுவோடு அமைதியில் வாழ்வதென்பது, இந்த அமைதியை நமக்குள் அனுவிப்பதாகும், அந்த அமைதி, அனைத்துச் சோதனைகள் மற்றும், துன்பநேரங்களில் நிலைத்திருக்கும் என்று கூறியத் திருத்தந்தை, எல்லாவேளைகளிலும், அமைதியை இழக்காமல், வாழ்வின் சுமைகளைத் தாங்கிச் செல்பவராய் கிறிஸ்தவர் இருக்க வேண்டும் என்று மறையுரையாற்றினார்.

பல புனிதர்கள், தங்களின் இறுதி நேரங்களில் அமைதியை இழந்துவிடாமல், திருமணத்திற்குச் செல்லும் விருந்தினர்கள் போன்று, மறைசாட்சிய வாழ்வை ஏற்கும் அளவுக்கு சான்றுகளாக வாழ்ந்ததற்கு, இயேசு தரும் அமைதி எனும் கொடையே காரணம் என்றுரைத்தார், திருத்தந்தை.

மருத்துவரிடம் செல்வதாலோ, பதட்டத்தைத் தணிப்பதற்கு எடுக்கும் மருந்துகள் அல்லது, வேறு எந்த மனிதச் செயல்கள் வழியாகவோ, இந்த அமைதியை நாம் பெற இயலாது, மாறாக, இது, நம்மிலிருக்கும் தூய ஆவியாரிடமிருந்து வருகிறது மற்றும் அது, நமக்கு வலிமையைத் தருகிறது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நகைச்சுவை உணர்வை இழக்காது

உலகிலிருந்து கிடைக்கும் போலியான அமைதி அல்லது வங்கியில் பணத்தை வைத்திருப்பதால் கிடைக்கும் அமைதியை விரும்பாமல், இயேசுவால் உறுதிகூறப்பட்ட அமைதியோடு, வாழ்வின் பெரும் துன்ப சோதனைகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கு ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தரும் இந்த அமைதி, நகைச்சுவை உணர்வை ஒருபோதும் இழக்காது என்றும், துன்பங்கள் நேரிடும்போதும்கூட, பிறரிடமும், தன்னிடமும் புன்னகையோடு இருக்கும் என்றும், நகைச்சுவை உணர்வு, இறையருளுக்கு மிக நெருக்கமாக இருப்பது என்றும், இச்செவ்வாய் திருப்பலி மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2019, 15:11
அனைத்தையும் படிக்கவும் >