தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை மறையுரை வழங்குதல் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை மறையுரை வழங்குதல்  (Vatican Media)

கவலையுடனிருத்தல் கிறிஸ்தவர்களின் மனப்பாங்கு அல்ல

நாம் முடங்கிவிடாமல், என்றும் வாழும் வகையில் நமக்கு ஆன்ம இளமையை வழங்குகிறார், தூய ஆவியார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

வாழ்வில் எத்தனை சிரமங்கள் வந்தாலும், நாம் தூய ஆவியாருடன் தினமும் மேற்கொள்ளும் உரையாடல்கள் வழியாக, அச்சிரமங்களை வெற்றி கொள்ளவும், நம் பாதையில் முன்னோக்கி நடக்கவும் முடியும் என, மே 28, இச்செவ்வாய்க் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் சீடர்களைவிட்டு இயேசு பிரிந்து செல்லவிருந்த வேளையில், சோகமாக இருந்த சீடர்களை நோக்கி தூய ஆவியார் குறித்து இயேசு எடுத்துரைத்ததைப் பற்றி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலி மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கவலையுடனிருத்தல் கிறிஸ்தவர்களின் மனப்பாங்கு அல்ல, நம் ஆன்மாவின் இளமையை, என்றும் புதுப்பிக்கும் தூய ஆவியார் நம்மோடு இருக்கையில் கவலைக்கு அங்கு இடமில்லை என்றார்.

இதயத்திலும் ஆன்மாவிலும் இளமையாக இருப்பவரே முழுமையான கிறிஸ்தவராக இருக்க முடியும் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு அருகிருந்து நமக்கு ஊக்கமளிக்கும் தூய ஆவியாரே, சிலுவையை நாம் தூக்கிக்கொண்டு, முன் நடக்க நமக்கு இதய இளமையை வழங்குகிறார் என்றார்.

தூய ஆவியாருடன் நாம் தினமும் மேற்கொள்ளும் உரையாடல்கள் வழியாக, நாம் இளமையைப் பெறுகிறோம், அந்த இளமை, நமக்கு நம்பிக்கையைப் பார்க்க உதவுகிறது எனவும் கூறினார் திருத்தந்தை.

நாம் பாவம் புரிந்தாலும் அதற்காக மனம் வருந்தி புதிய பாதையில் காலடி எடுத்து வைக்க உதவும் தூய ஆவியார், நாம் முடங்கிவிடாமல், என்றும் வாழும் வகையில் நமக்கு இளமையை வழங்குகிறார் என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், சாந்தா மார்த்தாவில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் சிலுவைகள் உண்டு, துன்பம்நிறைந்த நேரங்கள் உண்டு, ஆயினும், அவற்றில் வீழ்ந்துவிடாமல், வாழ்வில் முன்னோக்கிச் செல்வதற்கு, தூய ஆவியார் நமக்கு உதவுகிறார் என்பதை, இன்னல்நிறைந்த நேரங்களில் நாம் உணர்கிறோம் என எழுதியுள்ளார்.

28 May 2019, 14:14
அனைத்தையும் படிக்கவும் >