தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி - 100519 சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி - 100519  (ANSA)

தூய பவுல் போன்று கடவுளின் குரலுக்குத் திறந்தமனம் அவசியம்

தூய பவுல் அவர்களுக்கு, தமஸ்கு செல்லும் சாலையில் இடம்பெற்ற மனமாற்றம், மீட்பு வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்திருக்கின்றது. புதிய பாதைகளை நோக்குவோம். அவை ஆண்டவரின் பாதைகளாக இருந்தால், நன்மை விளைவிக்கும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தூய பவுலடிகளாரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, ஆண்டவரின் குரலுக்குத் திறந்தமனமும், பணிவும் உள்ளவர்களாய் வாழுமாறு, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், மே 10, இவ்வெள்ளி காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய பவுல் அவர்களின் மனமாற்றம் பற்றிக் கூறும் இத்திருப்பலியின் முதல் வாசகத்தை மையப்படுத்தி, மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

புறவினத்தாரின் திருத்தூதராகிய பவுலடிகளார், தலைக்கனம் கொண்டிருந்தார், ஆனால், கடின இதயத்தைக் கொண்டிருக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, அவரின் மனமாற்ற நேரம், மீட்பு வரலாற்றில், ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றது என்று கூறினார்.

அந்த நிகழ்வு, திருஅவையின் உலகளாவிய தன்மை மற்றும், யூதர் அல்லாத பிறஇன மக்களுக்கு, அதன் திறந்த உள்ளத்தை வெளிப்படுத்துகின்றது என்றும், இது முக்கியமானதாக இருந்ததால், கடவுள் அதை அனுமதித்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.

பவுலடிகளாரின் பண்புகள்

பவுலடிகளாரின் பண்புகள் பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, அவர், சட்டத்தின் தூய்மைத்துவத்தை மிகவும் அன்புகூர்ந்திருந்த, உறுதியான மனிதர் எனவும், அவர், சவாலான குணத்தைக் கொண்டிருந்தாலும், நேர்மை மற்றும், கொள்கையில் பற்றுறுதி கொண்டவராய் இருந்தார் என்றும், திருத்தந்தை தெரிவித்தார்.

பவுலடிகளார், கடவுளுக்குத் திறந்தமனம் உள்ளவராய் இருந்ததால், அவர் கொள்கை மாறாதவராய், பற்றுறுதியுடன் இருந்தார் என்றும், கடவுள் விரும்புகிறார் என்பதில் உறுதியாய் இருந்ததாலேயே, அவர், கிறிஸ்தவர்களைச் சித்ரவதை செய்தார் என்றும் உரைத்த திருத்தந்தை, அவர், பிடிவாதக்காரராய் இருந்தாலும், கடின இதயத்தைக் கொண்டிருக்கவில்லை, கடவுள் சுட்டிக்காட்டும் வழிகளுக்குத் திறந்த மனம் உடையவராய் இருந்தார் என்றும் உரையாற்றினார்.

திருஅவைக்காக, புதிய பாதைகளைக் காண்பதற்கு, தங்கள் வாழ்வைப் பணயம் வைத்துச் செயல்படும் எண்ணற்ற துணிச்சலான ஆண்களும், பெண்களும் இக்காலத்தில் உள்ளனர், நாமும் புதிய பாதைகளைத் தேடுவோம், அந்தப் பாதைகள், ஆண்டவரின் பாதைகளாக இருக்கும்வரை, அவை நமக்கு நன்மை பயக்கும், ஆழ்ந்த செபம், பணிவு, கடவுளுக்குத் திறந்தமனம் ஆகியவற்றில் முன்னோக்கிச் செல்வோம், இவ்வாறுதான் திருஅவையில் உண்மையான மாற்றம் இடம்பெறும் என்று, மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் டுவிட்டர்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலையில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும் இருந்தது. “நம் ஆண்டவரின் குரலுக்குப் பணிவுள்ளவர்களாயும், ஆண்டவருக்குத் திறந்தமனம் உள்ளவர்களாயும் வாழ்வதற்கு இறையருளை இறைஞ்சுவோம். மாபெரும் செயல்கள் ஆற்றுவதற்கு அஞ்சாமலும், சிறிய செயல்களில் கவனமாயும் இருப்பதற்கு, ஆண்டவரிடம் மன்றாடுவோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று பதிவாகியிருந்தன.

10 May 2019, 16:00
அனைத்தையும் படிக்கவும் >