தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தையின் மறையுரை - இடதுபுறம் முதல் வரிசையில் இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தையின் மறையுரை - இடதுபுறம் முதல் வரிசையில் இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா 

சக்தியனைத்தையும் கொண்டு செபிக்கவேண்டும் - திருத்தந்தை

மனப்பாடமாகத் தெரிந்த மந்திரங்களைக் கூறும் வெதுவெதுப்பான நிலையிலிருந்து வெளியேறி, முழு உள்ளத்துடன், தீவிர பக்தியுடன் செபிப்பது முக்கியம் – திருத்தந்தையின் மறையரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனை நேருக்குச் நேர் சந்தித்து, மன உறுதியுடன் செபிக்கவேண்டும் என்றும், வெதுவெதுப்பான மனநிலையைக் கொண்டிராமல், நம் சக்தியனைத்தையும் கொண்டு செபிக்கவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 4, இவ்வியாழனன்று வழங்கிய மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை, திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, விடுதலைப் பயண நூலில், (வி.ப. 32:7-14) மோசே தன் மக்கள் சார்பாக, இறைவனிடம் எழுப்பிய பரிந்துரை மன்றாட்டை மையப்படுத்தி, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தவக்காலத்தின் முக்கியத் தூண்களில் ஒன்று செபம்

செபம், உண்ணா நோன்பு, தர்மம் என்ற மூன்று முக்கியத் தூண்கள் மீது தவக்காலம் எழுப்பப்பட்டுள்ளது என்பதை தன் மறையுரையில் நினைவுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முழு உள்ளத்தோடு செபத்தில் ஈடுபட்ட ஆபிரகாம், மோசே, இறைவாக்கினர் சாமுவேலின் அன்னை அன்னா ஆகியோரை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.

தன் மக்களை அழிவிலிருந்து காக்க ஆபிரகாம், மோசே ஆகியோர் செபித்ததும், குழந்தைப்பேறு வேண்டி, சொற்கள் எதையும் கூறாமல், உள்ளத்து வேதனைகளை வெளியிட்ட சாமுவேலின் அன்னை அன்னா, மற்றும், நோயுற்ற தன் மகளுக்காக இயேசுவிடம், மனம்தளராது, தொடர்ந்து மன்றாடிய கானானியப் பெண் ஆகியோர் செபித்ததும் நமக்கு சிறந்த தூண்டுதல்கள் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மனப்பாடமாகத் தெரிந்த மந்திரங்களைக் கூறுதல்

நாம் தேவைகளில் இருக்கும் வேளையில், மேலோட்டமாக, நமக்கு மனப்பாடமாகத் தெரிந்த ஒரு சில மந்திரங்களைக் கூறுவதோடு திருப்தி அடைகிறோம் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய வெதுவெதுப்பான நிலையிலிருந்து வெளியேறி, முழு உள்ளத்துடன், தீவிர பக்தியுடன் செபிப்பது முக்கியம் என்று கூறினார்.

திருப்பலியில், இத்தாலிய அரசுத்தலைவர்

ஏப்ரல் 4, இவ்வியாழனன்று திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியில், இத்தாலிய அரசுத்தலைவர், செர்ஜியோ மத்தரெல்லா அவர்கள் கலந்துகொண்டார் என்று, வத்திக்கான் செய்தித் தொடர்புத் துறையின் தலைவர், அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார்.

தன் மறையுரையில் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 4, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டார்.

"நாம் செபிக்கும்போது, இயேசுவோடு இணைந்து செயல்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம். இயேசுவே நமது துணிவு. அத்தருணத்தில் நமக்காகப் பரிந்துபேசும் இயேசுவே நமது பாதுகாப்பு" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2019, 14:54
அனைத்தையும் படிக்கவும் >