தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கடின உள்ளத்தை வளர்க்கும் ஆபத்து நமக்கும் உள்ளது

ஆண்டவரின் குரலுக்கு செவிமடுக்காமல் வாழ்ந்தால், பல ஆண்டுகளாய் தண்ணீரின்றி காய்ந்து, கடினமாகும் நிலத்தைப்போல் நம் இதயங்கள் மாறிவிடும் – திருத்தந்தையின் மறையுரையும், டுவிட்டரும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டவர் மீது அவதூறு கூறும் வண்ணம் கடின உள்ளம் கொண்டிராமல், அவரது குரலுக்குச் செவிமடுக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 28, இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை நிறைவேற்றிய திருப்பலியில், "என் குரலுக்குச் செவிகொடுங்கள்" என்று இறைவாக்கினர் எரேமியா வழியே இறைவன் வழங்கும் அழைப்பை மையப்படுத்தி, திருத்தந்தை தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறைவனின் அழைப்பிற்குச் செவிமடுப்பது, நம்மை மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் சொல்லுக்கு செவிமடுக்காமல் வாழும் இதயம், பல ஆண்டுகளாய் தண்ணீரின்றி காய்ந்து, கடினமாகும் நிலத்தைப்போல் மாறிவிடும் என்று எடுத்துரைத்தார்.

இறைவனின் குரலுக்கு, இறைவார்த்தைக்கு செவிமடுக்காமல், ஊடகங்கள் வழங்கும் செய்திகளையும், அடுத்தவர் கூறும் அர்த்தமற்ற கதைகளையும் கேட்டு, நம் உள்ளங்கள் கடினமாகி, பிடிவாத குணமுடையவர்களாக மாறி விடுகிறோம் என்பதை, இறைவாக்கினர் எரேமியாவின் சொற்களோடு ஒப்பிட்டுக் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்களில் பலர், அவரது சொற்களைக் கேட்டிருந்தும், புதுமைகளைப் பார்த்திருந்தும், அவரை நம்புவதற்கு மறுத்து, கடின உள்ளத்தை வளர்த்துக்கொண்டனர் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே ஆபத்து நமக்கும் உள்ளது என்பதை தெளிவுபடுத்தினார்.

இயேசுவின் செயல்களுக்கு தவறான பொருள் கொடுத்து, அவர் ஆற்றிய நன்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்ந்தவர்களைப் போல, நாமும், இயேசுவின் செயல்பாடுகளுக்கு தவறான பொருள் கொடுப்பது, அவரைவிட்டு விலகிச் செல்வதன் முதல் நிலை என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.

இறைவன் கருணையும் பரிவும் உள்ளவர் என்பதால், அவரிடம் முழு உள்ளத்துடன் திரும்பி வருவதற்கு தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்பதை, தன் மறையுரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "ஆண்டவரின் குரலுக்கு செவிமடுக்காமல் வாழ்ந்தால், பல ஆண்டுகளாய் தண்ணீரின்றி காய்ந்து, கடினமாகும் நிலத்தைப்போல் நம் இதயங்கள் மாறிவிடும். எனவேதான், 'உங்கள் இதயங்களைக் கடினப்படுத்தாதீர்கள்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்ற சொற்களைப் பதிவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 March 2019, 13:44
அனைத்தையும் படிக்கவும் >