சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 070319 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 070319  (Vatican Media)

இறைவன் செய்த நன்மைகளின் நினைவுகளை இழக்கும் ஆபத்து

வாக்களிக்கப்பட்ட நாட்டை மறந்து, பாலை நிலத்தில் பல ஆண்டுகள் அலைந்து திரிந்த இஸ்ரயேல் மக்களைப்போல், நாமும், இறைவனின் நம் வாழ்வில் செய்த நன்மைகளின் நினைவுகளை இழக்கும் ஆபத்தில் இருக்கிறோம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 7 இவ்வியாழன் காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியில் வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில், மோசே மக்களுக்குமுன் வைத்த சவால்களை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.

வாழ்வா, சாவா? நன்மையா, தீமையா?

வாக்களிக்கப்பட்ட நாட்டில் நுழைவதற்குமுன், இஸ்ரயேல் மக்களின் முன்னிலையில், வாழ்வையும், சாவையும், நன்மையையும் தீமையையும் தான் வைப்பதாகக் கூறும் மோசே, அச்சவால்கள் வழியே, அம்மக்களை, விடுதலை நோக்கி அழைத்துச் சென்றார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

திசைகாட்டும் கருவி இல்லையெனில்…

நன்மையையும், வாழ்வையும் நோக்கி திரும்பியுள்ள திசைகாட்டும் கருவி நம் உள்ளத்தில் இல்லையெனில், தவறான வழிகளில் நம் வாழ்வு திரும்புவதோடு, அத்தகைய நிலையில் நாம் சமுதாயத்திற்கும் ஆபத்தான முறையில் நடந்துகொள்ளக் கூடும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

உயிர்த்த கிறிஸ்துவை சந்திக்கச் செல்லும் பாதை முழுவதும், தவறான திசைகாட்டிகளும், பொய்யான தெய்வங்களும் உள்ளன என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் செல்லும் சரியான பாதையைக் காட்ட, தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்று கூறினார்.

நினைவில் கொள்ளும் வரம்

வாக்களிக்கப்பட்ட நாட்டை மறந்து, பாலை நிலத்தில் பல ஆண்டுகள் அலைந்து திரிந்த இஸ்ரயேல் மக்களைப்போல், நாமும், இறைவனின் நம் வாழ்வில் செய்த நன்மைகளின் நினைவுகளை இழக்கும் ஆபத்தில் இருக்கிறோம் என்று கூறிய திருத்தந்தை, தவக்காலத்தின் துவக்கத்தில், இறைவனின் அருளை நினைவில் கொள்ளும் வரத்திற்காக செபிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2019, 09:04
அனைத்தையும் படிக்கவும் >