தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி  (Vatican Media)

இறை இரக்கம், நாம் நினைப்பதைவிட பெரியது

வாழ்வில் ஒவ்வொரு நாளும் மற்றவர்களை எத்தனைமுறை தீர்ப்பிடுகிறோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனின் இரக்கம் மிக உயர்ந்தது, நாம் நினைப்பதைவிட மிகப் பெரியது என்பதை மனதில்கொண்டு ஒவ்வொருவரும் செயல்படுவோம் என இத்திங்கள் காலை திருப்பலியில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தீர்ப்பிடாதீர்கள், மன்னியுங்கள், இரக்கமுள்ளவர்களாகச் செயல்படுங்கள் என இயேசு விண்ணப்பிப்பதை எடுத்துரைக்கும் இன்றைய நற்செய்தியின் அடிப்படையில், சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலய திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ் நாட்டு பங்குதந்தை புனித ஜான் மேரி வியான்னி அவர்களின் வாழ்வில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை மேற்கோள்காட்டி, இறை இரக்கத்தின் மேன்மையைச் சுட்டிக்காட்டினார்.

பாலத்திலிருந்து குதித்து தற்கொலைப் புரிந்த தன் கணவர், தற்கொலையின் வழியாக மன்னிக்க முடியாத பெரிய பாவத்திற்கு உள்ளாகிவிட்டார் என அழுது புலம்பிய விதவைப் பெண்ணை நோக்கி, 'அந்த பாலத்திற்கும், அவர் விழுந்த ஆற்றிற்கும் இடையே இறைவனின் இரக்கம் இருந்தது' என புனித ஜான் மேரி வியான்னி கூறியதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, இறைவனிடம் திரும்பி வர, நம்மால் முடியாது என, எவரும் எண்ணமுடியாது என்று கூறினார்.

வாழ்வில் ஒவ்வொரு நாளும் மற்றவர்களை எத்தனைமுறை தீர்ப்பிடுகிறோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், ஏனெனில், இந்த குணமானது, நம் முழு கவனமின்றி, ஒரு தொடர் நிகழ்வாக மாறிவிடுகிறது எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மற்றவர்களுக்கு அளவின்றி வழங்கும்போது, நமக்கு, அது, நூறு மடங்காக, இறைவனால் வழங்கப்படும் எனவும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, பொருளுதவி மட்டுமல்ல, ஆலோசனை, புன்னகை என பல்வேறு வழிகளில் நாம் உதவமுடியும் எனவும் கூறினார்.

18 March 2019, 16:03
அனைத்தையும் படிக்கவும் >