தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

துன்புறும் சகோதரர்களுக்கு, இதயத்தில் வழங்கப்படும் இடம்

காயினை நோக்கி, உன் சகோதரன் எங்கே எனவும், ஆதாமை நோக்கி, நீ எங்கே இருக்கிறாய் எனவும் இறைவன் கேட்ட கேள்விகள், நம்மை நோக்கியவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நோயுற்ற, பசி தாகமுடைய, மற்றும், சிறையிலுள்ள நம் சகோதரர்களுக்கு, நம் இதயத்தில் என்ன இடம் வழங்கியுள்ளோம் என்பது, இன்று இயேசுவால் நம்மிடம் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது என தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இத்திங்களன்று காலை, திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று காயினை நோக்கி இறைவன் கேட்டதுபோல், இன்றும் நம்மை நோக்கி, எங்கே உங்கள் சகோதரர் என இறைமகன் இயேசு கேட்கிறார், என்றார்.

நோயுற்றோர், பசி தாகமுடையோர், மற்றும், சிறையுயிலுள்ள நம் சகோதரர்கள் எங்கே என்ற கேள்விக்கு, நம் பதில்மொழியானது, சமரசப் பதில்மொழியாக இல்லாமல், நாம் தனிமைப்பட்ட முறையில் உணர்ந்து வழங்கும் பதிலாக இருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உன் சகோதரன் எங்கே என்ற கேள்விக்கு, காயின் தன் பொறுப்புணர்வை கைகழுவி இறைவனின் பார்வையைத் தவிர்க்க முனைந்த நிகழ்வை, விவிலியத்தின் துவக்க நூல் வழியே நாம் அறிவோம் என்றும், மனிதன்  விரும்பாத இத்தகைய கேள்விகள், விவிலியத்தில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன என்றும் கூறினார்.  

பசித்திருக்கும் உன் சகோதரன் எங்கே என இறைவன் நம்மிடம் கேட்கும்போது, அவர் ஏதாவது ஒரு காரித்தாஸ் மையத்தில் பசியாறிக் கொண்டிருப்பார் என்ற பதிலைக் கூறி நம்மையே நாம் தேற்றிக் கொள்கிறோம், அதேபோல், நோயாளிகளுக்கு இலவச மருத்துவ மனைகள் உள்ளன, சிறைக்கைதிகளோ அவர்கள் செய்த தவறுகளுக்காக தண்டனையை அனுபவிக்கிறார்கள் என சமாதானங்கள் சொல்லி, நாம் கையை கழுவுவது எளிதாக இருக்கின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இந்த பிரச்னையிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் பார்க்கின்றோமேயொழிய, அதனைத் தொடவும், அதில் நுழையவும் அஞ்சுகின்றோம் என மேலும் கூறினார்.

பாவமிழைத்த காயினை நோக்கி, உன் சகோதரன் எங்கே என இறைவன் கேட்ட கேள்வியும், கடவுளின் கட்டளையை மீறியபின் ஆதாமை நோக்கி, நீ எங்கே இருக்கிறாய் என கேட்கப்பட்ட கேள்வியும், இன்று நம்மை நோக்கி கேட்கப்பட்டு, நம் சகோதரர்கள் மீது நாம் கோள்ள வேண்டிய அக்கறையை வெளிப்படுத்த விண்ணப்பிக்கின்றன என்றார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2019, 15:41
அனைத்தையும் படிக்கவும் >