தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

பணியாற்றத் தேவையான வறுமை, பணிவு, கனிவு

மக்களை மனம் மாற்றவும், அவர்களைக் குணமாக்கவும் செல்லும் சீடர்கள், வறுமை, பணிவு, கனிவு ஆகிய பண்புகளை அணிந்து செல்லவேண்டும் என்று இயேசு விரும்புகிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மற்றவர்களின் மனதைத் திறந்து, அவர்களில் மனமாற்றத்தை உருவாக்க விழைவோர், பணிவோடும், கனிவோடும் அடுத்தவரை அணுகவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, மாற்கு நற்செய்தியிலிருந்து வாசிக்கப்பட்ட பகுதியை (மாற்கு 6:7-13) மையப்படுத்தி, தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மக்களை குணப்படுத்தும் பணி

மக்களைக் குணப்படுத்தும் பணியை முதன்மைப்படுத்தி, இயேசு தன் சீடர்களை அனுப்பினார் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவங்களைக் களைவதும், புதுப்பித்தலும், குணமாக்கும் பணியின் அடித்தளங்கள் என்று கூறினார்.

மக்களை மனம் மாற்றவும், அவர்களைக் குணமாக்கவும் செல்லும் சீடர்கள், வறுமை, பணிவு, கனிவு ஆகிய பண்புகளை அணிந்து செல்லவேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது என்று தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இப்பண்புகளைக் கொண்டவர்களே, தீய சக்திகளை விரட்டும் அதிகாரமும் பெறுகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

உண்மையான அக்கறை கொண்டிருத்தல்

மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருப்பதன் வழியாக ஒருவர் தீய சக்திகள் மீது அதிகாரம் பெற முடியுமே தவிர, தனது சொந்த அறிவுத்திறன், திறமை இவற்றின் அடிப்படையில் அல்ல என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.

குணப்படுத்தும் சக்தி, அருள்பணியாளர்கள், ஆயர்கள் இவர்களிடம் மட்டும் காணப்படும் பண்பு அல்ல, மாறாக, அனைத்து கிறிஸ்தவர்களிடமும் உள்ள பண்பு என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, பிறரை குணப்படுத்துவதன் வழியே, நாமும் குணமடைகிறோம் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2019, 14:21
அனைத்தையும் படிக்கவும் >