தேடுதல்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 170119 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 170119  (ANSA)

உள்ளம் கடினமாவதைக் குறித்து திருத்தந்தை எச்சரிக்கை

இன்றையத் திருஅவையில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், அருள் சகோதரிகள், ஆயர்கள் அனைவருக்குமே, இறைவனைவிட்டு விலகிச் செல்லும் ஆபத்து உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும்" என்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் கூறப்பட்டுள்ள சொற்களை (எபி. 3:7-14) ஓர் எச்சரிக்கையாக விடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில், நமது உள்ளம் கடினமாவதைக் குறித்துப் பேசினார்.

இன்றையத் திருஅவையில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், அருள் சகோதரிகள், ஆயர்கள் அனைவருக்குமே, இறைவனைவிட்டு விலகிச் செல்லும் ஆபத்து உள்ளது என்பதை, திருத்தந்தை, தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

இறைவனைவிட்டுப் பிரிந்து, தன்னையே மூடிவைக்கும் இதயம், கடனமாகிப் போகும் என்று தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிலையிலிருந்து மீண்டும் வெளியேறுவது, நடக்கப் பழகும் குழந்தை, தடுமாறி விழுந்து, எழுந்து, நடப்பது போன்றது என்ற உருவகத்தைப் பயன்படுத்தி விளக்கினார்.

கடினமாகும் இதயங்கள் கருத்தியல்களை வளர்த்துக்கொள்ளும் என்ற எச்சரிக்கையை தன் மறையுரையில் வழங்கிய திருத்தந்தை, இறைவனின் வார்த்தையும், தூய ஆவியாரின் அருளும் கருத்தியல்கள் அல்ல என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இவ்வியாழன் காலையில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "கோழைத்தனத்திற்கு இட்டுச்செல்லும், வழிதவறும் இதயம் கொண்டிராமல் இருப்பதில் கவனம் செலுத்துவோம். கடினமான இதயம் தன்னை மூடிக்கொள்கிறது, சமரசம் செய்துகொள்ளும் கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிமையாகிவிடுகிறது" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2019, 15:24
அனைத்தையும் படிக்கவும் >